சிறுவாணி அணையின் நீர்மட்டம் 16 அடியாக சரிவு

கோடை வெப்பம் அதிகரித்து வருவதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 16 அடியாக குறைந்துள்ளது.
கோடை வெப்பம் அதிகரித்து வருவதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 16 அடியாக குறைந்துள்ளது.
சிறுவாணி அணை
கோவை நகரில் உள்ள 100 வார்டுகளில், 22 வார்டுகளுக்கு சிறுவாணி அணை மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மொத்தம் 50 அடி உள்ள சிறுவாணி அணையில் 45 அடிக்கு மட்டும் தண்ணீரை தேக்கிவைக்க கேரள பொதுப்பணித்துறை அனுமதி அளிக்கிறது. ஆண்டுதோறும் 5 அடி நீர்மட்டம் இழப்பு ஏற்படுவதால் கோடையில் சிறுவாணியில் குடிநீர் வினியோகத்தில் பற்றாக்குறை ஏற்படுகிறது.
தென்மேற்கு பருவமழை காலத்தில் சிறுவாணியில் இருந்து நகருக்கு 100 எம்.எல்.டி. (தினமும் 10 கோடி லிட்டர்) தண்ணீர் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது நீர்மட்டம் வெகுவாக சரிந்துஉள்ளது.
குடிநீர் வினியோகம் மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக சிறுவாணி அணையில் தினமும் 8 சென்டி மீட்டர் அளவுக்கு நீர்மட்டம் குறைகிறது. இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளது. இதனால் சிறு வாணியில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் நீர்மட்டம் 16 அடியாக உள்ளது. அணையில் இருந்து தினமும் 50.37 எம்.எல்.டி. (5 கோடியே 37 லட்சம் லிட்டர்) குடிநீர் வினி யோகிக்கப்படுகிறது.
சிறுவாணியில் இருக்கும் தண்ணீரை வைத்து மே மாதம் 15-ந் தேதி வரை நிலைமையை சமாளிக்க முடியும். அதன்பிறகு தென் மேற்கு பருவமழை கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
குடிநீர் பிரச்சினை
சிறுவாணி அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால் குனிய முத்தூர், கோவைப்புதூர், கரும்புக்கடை உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்து 15 நாட்களாகிறது. எனவே மற்ற அணைகளில் இருந்து வரும் தண்ணீரையும் இந்த பகுதிகளுக்கு வழங்கி குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.






