சோலையாறு அணை நீர்மட்டம் 97 அடியாக குறைந்தது
197 நாட்களுக்கு பிறகு சோலையாறு அணை நீர்மட்டம் 97 அடியாக சரிந்தது.
வால்பாறை
197 நாட்களுக்கு பிறகு சோலையாறு அணை நீர்மட்டம் 97 அடியாக சரிந்தது.
சோலையாறு அணை
வால்பாறை பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை கனமழையாக பெய்தது. இதனால் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணையாக விளங்கும் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. தொடர்ந்து ஜூலை மாதம் 10-ந் தேதி முழு கொள்ளளவை எட்டியது. பின்னர் அணையின் பாதுகாப்பு கருதி மதகுகள் திறக்கப்பட்டு உபரி நீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டது. இதனால் அணையில் நீர்மட்டம் 100 அடியாக இருந்தது.
இந்த நிலையில் தொடர்ந்து மின் நிலையங்கள் இயக்கப்பட்டு வந்ததாலும், சேடல் பாதை வழியாக தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு சென்று வந்ததாலும், மழை குறைந்ததாலும் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
மணல் திட்டுகள்
இதன் காரணமாக சோலையாறு அணை நீர்மட்டம் 197 நாட்களுக்கு பிறகு நேற்று 97 அடியாக குறைந்தது. எந்த ஆண்டும் இல்லாத நிலையில், இந்த ஆண்டு இவ்வளவு நாட்கள் சோலையாறு அணை நீர்மட்டம் 100 அடியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
நீர்மட்டம் குறைந்ததால், அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மூழ்கியிருந்த மணல் திட்டுகள், சிறு வனச்சோலைகள் வெளியே தெரிந்தது. தற்போது அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 60 கன அடியாக உள்ளது. சோலையாறு மின் நிலையம்-1 இயக்கப்பட்டு மின் உற்பத்திக்கு பிறகு 828 கன அடி தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் சோலையாறு மின் நிலையம்-2 இயக்கப்பட்டு மின் உற்பத்திக்கு பிறகு 461 கன அடி தண்ணீர் ஒப்பந்தப்படி கேரளாவிற்கும் வெளியேற்றப்பட்டு வருகிறது.