மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மாயனூர் கதவணையை வந்தடைந்தது


மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மாயனூர் கதவணையை வந்தடைந்தது
x

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மாயனூர் கதவணையை வந்தடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கரூர்

தண்ணீர் திறப்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ந்தேதி காலை பாசனத்திற்காக காவிரி ஆற்றில் சுமார் 3 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட்டார். அணையில் இருந்து சீறிப்பாய்ந்து வெளியேறிய தண்ணீரில் மலர்களை தூவி வரவேற்றார். படிப்படியாக உயர்ந்து கடந்த 12-ந்தேதி இரவு சுமார் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 17.37 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மதியம் கரூர் மாவட்ட எல்லையான தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலம் பகுதிக்கு தண்ணீர் வந்தடைந்தது.

மாயனூர் கதவணையை வந்தடைந்தது

அதனைத்தொடர்ந்து காவிரி ஆற்று தண்ணீர் வாங்கல் வழியாக மாயனூர் கதவணையை நேற்று காலை வந்தடைந்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி கதவணையின் நீர்மட்டம் 4,250 கனஅடியாக இருந்தது. பின்னர் படிபடியாக நீர்மட்டம் உயர்ந்து மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 7,744 கனஅடியாக இருந்தது.இந்த தண்ணீர் அனைத்தும் அப்படியே காவிரியில் திறக்கப்பட்டது. இதனால் அந்த தண்ணீர் திருச்சி மாவட்டம் முக்கொம்பை ேநாக்கி செல்கிறது. தற்போது மாயனூர் கதவணை கடல்போல் காட்சியளிக்கிறது. இதனை அப்பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.நள்ளிரவு 1 மணிக்கு மேல் கதவணையின் நீர்மட்டம் 9,000 கனஅடியாக உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.


Next Story