நெற்கதிர்களை நாசப்படுத்திய காட்டுயானை
கூடலூர் அருகே நெற்கதிர்களை நாசப்படுத்திய காட்டுயானையால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கூடலூர்
கூடலூர் அருகே நெற்கதிர்களை நாசப்படுத்திய காட்டுயானையால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
காட்டுயானைகள்
கூடலூர் நகராட்சி மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் இணையும் எல்லையோரங்களில் தொரப்பள்ளி, அள்ளூர்வயல், குனில், புத்தூர் வயல் உள்பட ஏராளமான கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் நெல், வாழை, பாக்கு, காய்கறிகள் விளைகிறது.
இந்த நிலையில் முதுமலையில் இருந்து காட்டு யானைகள் அடிக்கடி வெளியேறி ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. தற்போது கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நெற்கதிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராகி வருகிறது. அதற்கேற்ப நெற்கதிர்களை தேடி காட்டு யானைகளும் விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருகிறது.
நெற்கதிர்கள் நாசம்
இதற்கிடையில் நேற்று முன்தினம் குனில் வயல் கிராமத்துக்குள் நள்ளிரவு காட்டு யானை ஒன்று புகுந்தது. பின்னர் ஸ்ரீமதுரை ஊராட்சி மன்ற தலைவர் சுனில் உள்பட சில விவசாயிகளுக்கு சொந்தமான வயலில் நெற்கதிர்களை மிதித்து நாசம் செய்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் வனச்சரகர் யுவராஜ் தலைமையில் வனவர் செல்லதுரை, வன காப்பாளர்கள் சிவக்குமார், மாதவன் உள்ளிட்ட வனத்துறையினர் நேற்று காலை 4 மணிக்கு விரைந்து சென்று காட்டு யானையை விரட்டியடித்தனர். தொடர்ந்து சேதமடைந்த நெற்கதிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உறுதி அளித்தனர்.
தடுக்க வேண்டும்
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கூடலூர் பகுதியில் ஏக்கர் கணக்கில் நெற்கதிர்கள் விளைந்துள்ளது. இதனால் முதுமலை வனத்தில் உள்ள காட்டு யானைகள் கிராமங்களை நோக்கி வர தொடங்கியுள்ளது. எனவே வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து காட்டு யானைகள் வராமல் தடுக்க வேண்டும். இல்லையெனில் பல்வேறு சிரமங்களுக்கிடையே பராமரித்து வந்த பயிர்கள் வீணாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.