வனத்துறையினரை விரட்டிய காட்டு யானைகளால் பரபரப்பு


வனத்துறையினரை விரட்டிய காட்டு யானைகளால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 July 2023 1:30 AM IST (Updated: 12 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

தமிழக-கேரள எல்லையில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்டும் போது, யானைகள் வனத்துறையினரை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

கூடலூர்

தமிழக-கேரள எல்லையில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்டும் போது, யானைகள் வனத்துறையினரை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வனத்துறையினரை விரட்டின

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தமிழக-கேரள எல்லையில் உள்ள ஒரு கிராமத்துக்குள் நேற்று முன்தினம் இரவு 3 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தன. தொடர்ந்து சாலையில் உலா வந்தது. இதனை கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து வனத்துறையினர் ஜீப்பில் விரைந்து வந்தனர். அதன் பின்னர் ஹாரன் அடித்தவாறு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் நடுவே காட்டு யானைகள் ஓடின.

பின்னால் ஜீப்பில் இருந்தபடி வனத்துறையினர் விரட்டி சென்றனர். அப்போது யானைகள் திடீரென திரும்பி நின்றன. தொடர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தும்பிக்கையை உயர்த்தி பிளிறியவாறு வனத்துறையினரின் வாகனத்தை துரத்தின. இதனால் வனத்துறையினர் ஜீப்பை பின்னோக்கி ஓட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனப்பகுதியை சுற்றி அகழி வெட்ட வேண்டும் என்றனர்.

காட்டு யானைகள்

இதேபோல் ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜ் நகர் பகுதியில் நேற்று அதிகாலையில் காட்டு யானைகள் உலா வந்தன. பின்னர் பொதுமக்கள் வீடுகளை முற்றுகையிட்டது. அப்பகுதியை சேர்ந்த தொழிலாளி யோகராஜ் என்பவரது வீட்டின் பின்பக்க சுவர்களை யானைகள் உடைத்தன. அப்போது சத்தம் கேட்டு யோகராஜ் குடும்பத்தினர் பயத்தில் கூச்சலிட்டனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

சேரம்பாடி அருகே சப்பந்தோடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2 காட்டு யானைகள் புகுந்து, குடியிருப்புகளை முற்றுகையிட்டன. பிரமிளா என்பவரது வீட்டின் முன்பு இருந்த பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி, பாத்திரங்களை சேதப்படுத்தின. தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.


Next Story