குறுகிய பாலத்தில் சிகிச்சைக்காக மூதாட்டியை கட்டிலில் தூக்கி செல்லும் அவலம்


குறுகிய பாலத்தில் சிகிச்சைக்காக மூதாட்டியை கட்டிலில் தூக்கி செல்லும் அவலம்
x

குறுகிய பாலத்தில் சிகிச்சைக்காக மூதாட்டியை கட்டிலில் தூக்கி செல்லும் அவலம்

நாகப்பட்டினம்

திருக்குவளை அருகே ஆட்டோ செல்ல வழி இல்லாததால் குறுகிய பாலத்தில் சிகிச்சைக்காக மூதாட்டியை கட்டிலில் தூக்கி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறுகிய பாலம்

நாகை மாவட்டம் திருக்குவளை அருகே எட்டுக்குடி ஊராட்சி நாகமரத்தடி தெரு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் போதிய சாலை வசதி இல்லை. இங்குள்ள திருவாய்மூரான் ஆற்றுக்கு குறுக்கே உள்ள குறுகிய பாலத்தை தான் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாலம் தடுப்பு சுவர்கள் இன்றி, சேதமடைந்து ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. இதில் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாது. சைக்கிள், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கூட ஒருவித அச்சத்துடனேயே இந்த பாலத்தை கடந்து செல்கின்றனர்.

பாலத்தின் கீழ் பகுதி சேதமடைந்துள்ளதால் வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் பாலத்தை கடந்து செல்ல அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். இதனால் பள்ளி மாணவ- மாணவிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

கட்டிலில் தூக்கி செல்லும் அவலம்

அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட வர முடியாத நிலையை சந்தித்து வருவதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்தநிலையில் நேற்று அந்த பகுதியில் உடல்நலம் சரியில்லாத மூதாட்டியை அவசர சிகிச்சைக்காக கொண்டு செல்ல ஆட்டோவை அழைத்துள்ளனர். ஆனால் ஆட்டோ செல்ல அந்த குறுகிய பாலத்தில் வழி இல்லாததால் பாலத்துக்கு வெளியே ஆட்டோ நின்றது.

வேறு வழி இல்லாமல் உறவினர்கள் சிகிச்சைக்காக மூதாட்டியை கட்டிலில் படுக்க வைத்து தூக்கி கொண்டு அந்த பாலம் வழியே வந்து, ஆட்டோவில் ஏற்றி அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

புதிய பாலம் கட்டித்தர வேண்டும்

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில்,

நாகமரத்தடி பகுதிக்கு திருவாய்மூரான் ஆற்றின் குறுக்கே உள்ள குறுகிய பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இல்லையென்றால் சித்தாய்மூர் வழியாக 2 கிலோ மீட்டர் சுற்றி போக வேண்டும். அவசர தேவைக்கு இந்த குறுகிய பாலத்தை கடந்து செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. பாலத்தில் ஆட்டோ செல்ல வழி இல்லாததால் உடல்நிலை சரியில்லாதவர்களை கட்டிலில் தூக்கி கொண்டு பாலத்தை கடந்து செல்கின்றோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடு ஒன்று பாலத்தை கடக்கும் போது தவறி ஆற்றில் விழுந்து இறந்தது.

எனவே குறுகிய பாலத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்றனர்.

1 More update

Related Tags :
Next Story