குளித்தலை பகுதியில் பொது இடங்களில் வளர்க்கப்படும் மரங்களை வெட்டும் அவலம்


குளித்தலை பகுதியில் பொது இடங்களில் வளர்க்கப்படும் மரங்களை வெட்டும் அவலம்
x

குளித்தலை பகுதியில் பொது இடங்களில் வளர்க்கப்படும் மரங்களை வெட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

மரங்கள் வளர்ப்பு முக்கியம்

மரம் வளர்ப்பு என்பது இக்காலகட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. அரசே வனத்துறை நெடுஞ்சாலைத்துறை உள்பட பல்வேறு துறைகள் சார்பில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க ஆவண செய்துள்ளது. அதுபோல தற்போது எந்த நிகழ்ச்சியானாலும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மரக்கன்று நட்டு வைப்பது வழக்கமான நிகழ்வாக தற்போதைய காலகட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

அது அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் தனியா நிகழ்ச்சியாக இருந்தாலும் பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் நிகழ்ச்சியாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சிக்கு வரும் முக்கிய விருந்தினரை மரக்கன்று ஒன்றை நட்டு வைக்க சொல்கின்றனர். சாலைகள் அகலமாக்கப்படும் பொழுது சாலையோரத்தில் உள்ள மரங்கள் வெட்டப்படுவதால் மீண்டும் சாலையோரம் மரங்கள் வளர நெடுஞ்சாலை துறை மூலம் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்படுகிறது.

அனுமதி வேண்டும்

அதுபோல இன்றைய சூழ்நிலையில் திருமணம், வரவேற்பு உள்ளிட்ட விழாக்களில் மணமக்களை வாழ்த்த வருபவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் பழக்கம் பல்வேறு இடங்களில் நடப்பதை பார்க்க முடிகிறது. அந்த அளவிற்கு மரங்களை வளர்க்க வேண்டும் என்ற முக்கியத்துவம் அனைவரிடமும் கொண்டு செல்ல பலர் தங்களால் முயன்ற முயற்சிகளை செய்து வருகின்றனர்.

ஒரு நபர் தனக்கு சொந்தமான இடத்தில் மரம் வளர்த்தாலும், பொதுமக்கள் சார்பில் மரக்கன்று நட்டு பொது இடத்தில் வளர்க்கப்பட்டு வந்தாலும், நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணித்துறை மூலம் சாலையோரம், வாய்க்கால் மற்றும் ஆற்றங்கரையோரம் மரங்கள் வளர்த்தாலும் அந்த மரங்களை வெட்ட வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் தகவல் அளித்து பின்னர் அப்பகுதியில் உள்ள கோட்டாட்சியரின் அனுமதி பெற்ற பின்னரே ஒரு மரத்தை யாராக இருந்தாலும் அகற்ற முடியும்.

குற்றச்சாட்டு

மின் கம்பிகள் செல்லும் பகுதிகளில் மரங்கள் வளர்ந்து அதன் கிளைகள் மின் கம்பியில் உரசியபடி பல இடங்களில் இருக்கும். அதுபோன்ற சூழ்நிலையில் மெயின் வாரியத்தினர் மின்கம்பிகளில் உரசி செல்லும் மர கிளைகளை வெட்டி அகற்றுவார்கள் தவிர மரங்களை அவர்கள் பெரும்பாலும் வெட்டுவதில்லை. அந்த அளவுக்கு ஒரு மரத்தின் வளர்ப்பு மற்றும் அழிப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மனிதனும் ஒரு மரக்கன்று யாவது நட்டு வளர்க்க வேண்டும் என்று கூறப்படுவதை நாம் கேட்டுள்ளோம்.

ஆனால் பல இடங்களில் உரிய அனுமதி பெறாமல் மரங்கள் வெட்டப்படுவதாக குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் கிடைக்கும் பொழுது அவர்கள் அங்கு நேரடியாக சென்று அது சிறிய மரமாக இருந்தாலும் அந்த மரம் வெட்டுவதை தடுத்து விடுகின்றனர். மரங்களை வெட்டி கடத்தி சென்றவர்கள் மீது வழக்கு கூட தொடரப்பட்டுள்தாக கூறப்படுகிறது.

மரத்தை வெட்ட முயற்சி

குளித்தலை வட்ட பகுதியில் கொரோனா நோய் பரவலின் பொழுது சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் சார்பில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டன. அதுபோல குளித்தலை கீழே முதலியார் தெரு பகுதியில் நட்டு வளர்ந்து வரும் மரத்தினை மரத்தின் அருகில் உள்ள (உரம் விற்கும்) கடையின் உரிமையாளர் வெட்டச் சொன்னதாக கூறி கூலி தொழிலாளி ஒருவர் அந்த மரத்தினை வெட்ட முற்பட்டுள்ளார். இதை அறிந்த அப்பகுதி மக்கள் மரத்தை வெட்டுவதை தடுத்து இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர் அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் மரத்தை வெட்டக்கூடாது என எச்சரித்து சென்றுள்ளாராம். இந்த மரம் வெட்ட முற்பட்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இதையடுத்து இச்சம்பவத்தை கண்டித்து சிலர் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

யாருக்கும் உரிமை இல்லை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் குளித்தலை ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன் கூறுகையில், கொரோனா காலகட்டத்தில் குளித்தலை மற்றும் அல்லாது பல்வேறு பகுதிகளில் சமூக ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் இளைஞர்கள் சார்பில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டன. மரம் வளர்க்க வேண்டும் என்று அரசே தெரிவிக்கும் போது ஒருவரது சொந்த இடத்தில் வளர்ந்த மரத்தை வெட்டுவதில் தவறில்லை. எந்த ஒரு இடையூறும் இல்லாமல் தெருக்களின் ஓரங்களில் வளர்க்கப்படும் மரத்தினை வெட்டுவது என்பது யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் குளித்தலை பகுதியில் உரிய அனுமதி பெறாமல் பொது இடங்களில் வளர்க்கப்படும் மரங்கள் வெட்டப்பட்டால் அதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும், என்றார்.

விசாரணை வேண்டும்

தன்னார்வலர் பிரபாகரன் கூறுகையில், குளித்தலை போலீஸ் நிலையம் அருகில் உள்ள கீழமுதலியார் தெருவில் லாக்டவுனில் தன்னார்வலா்களால் நட்டு வைத்து பராமரிக்கப்பட்ட மரத்தினை அங்குள்ள உரக்கடை நிர்வாகம் வெட்டி சாய்க்க பார்க்கிறது. உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டு நகராட்சிக்கும் கிராம உதவி அலுவருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வந்து எச்சரித்து சென்றனர். இது தொடர்பாக சம்பந்தபட்டவரிடம் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். நட்டு வைத்த மரத்தினை பாதுகாக்க வேண்டும். மரம் மக்களுக்கு நிழலாக மட்டுமல்ல பல்வேறு வகைகளில் பயனுள்ளதாக உள்ளது என்பதை உணர வேண்டும், என்றார்.


Next Story