கலெக்டர் அலுவலகம் முன்புதீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு


கலெக்டர் அலுவலகம் முன்புதீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Jun 2023 7:10 PM GMT (Updated: 20 Jun 2023 7:43 AM GMT)

மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி

மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

வாரிசு சான்றிதழ்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள இடையாற்று மங்கலம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். விவசாயி. இவரது மனைவி அமல சாந்தி (வயது 39). இவரது பெரியம்மாவுக்கு சொந்தமாக தஞ்சாவூரில் ரூ.2 கோடி மதிப்பிலான சொத்து உள்ளது. இதனை தனது பெயருக்கு மாற்றம் செய்யவும், வாரிசு சான்றிதழ், பத்திரம் பெயர் மாற்றம் செய்யவும் வக்கீல் உள்பட 2 பேருக்கு ரூ.7½ லட்சம் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் அமலசாந்திக்கு 1 வருடத்திற்கு மேலாகியும் அவருக்கு வாரிசு சான்றிதழ், பத்திரம் பெயர் மாற்றி தரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் போலீஸ் நிலையம், கமிஷனர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

தீக்குளிக்க முயற்சி

இதனால் ஏமாற்றம் அடைந்த அமலசாந்தி இது தொடர்பாக மனு அளிப்பதற்காக தனது குடும்பத்துடன் நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு வருகை தந்தார். அப்போது, அவர் மறைத்து வைத்து எடுத்து வந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து தனது தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை தடுத்து பாட்டிலை பிடுங்கினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story