ஓடும் ரெயிலை நிறுத்திய பெண்கள்


ஓடும் ரெயிலை நிறுத்திய பெண்கள்
x
தினத்தந்தி 13 Feb 2023 1:00 AM IST (Updated: 13 Feb 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்


சேலத்தில் இருந்து சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு கருப்பூர் வழியாக எக்ஸ்பிரஸ், பயணிகள் ரெயில்களும், சரக்கு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மதியம் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பாட்னாவுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் சேலத்தை கடந்து சென்றது. கருப்பூர்-தின்னப்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே அந்த ரெயில் திடீரென நின்றது. மேலும் முன்பதிவு செய்த பெட்டியில் இருந்து 3 பெண்கள் கீழே இறங்கினர். இதனைப் பார்த்த ரெயில் டிரைவர் மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் அந்த பெண்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த பெண்கள் தாங்கள் முன்பதிவு செய்த இருக்கையை சிலர் ஆக்கிரமித்து அமர்ந்துள்ளனர். இதுகுறித்து கேட்டால் இடத்தை தரமறுப்பதுடன், தகராறில் ஈடுபடுகிறார்கள். எனவே தாங்கள் அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தியதாக தெரிவித்தனர். இதையடுத்து அடுத்த ரெயில் நிலையத்தில் உரிய இருக்கையை ஒதுக்கி தருவதாகவும், அதுவரை முதல் வகுப்பில் பயணம் செய்யுமாறும் டிக்கெட் பரிசோதகர்கள் கூறினர். இதையடுத்து அந்த பெண்கள் முதல் வகுப்பில் பயணம் செய்தனர். 20 நிமிடங்களுக்கு பிறகு ரெயில் புறப்பட்டு தின்னப்பட்டி ரெயில் நிலையத்துக்கு சென்றது. அங்கு இருந்த ரெயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் புகார் தெரிவிக்கப்பட்ட பெட்டிக்கு சென்றனர். அங்கு முன்பதிவு செய்யாத வடமாநில தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அமர்ந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, முன்பதிவில்லாத பெட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் 1½ மணி நேரம் தாமதமாக ரெயில் இயக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சேலம் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story