கோலப்பொடி தயாரிக்கும் பணி தீவிரம்


கோலப்பொடி தயாரிக்கும் பணி தீவிரம்
x

ஸ்ரீவில்லிபுத்தூர், தாயில்பட்டி பகுதிகளில் கோலப்பொடி தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

விருதுநகர்

மார்கழி மாதம் பிறந்து விட்டால் கதிரவன் கண் விழிக்கும் முன் கண் விழித்து குளிர்ந்த நீரில் நீராடி கோலத்தால் வாசலை அலங்கரித்து அன்றைய பொழுதை இனிதே வரவேற்கத்தொடங்கி விடுவர் இல்லத்தரசிகள். அவர்களுடன் சேர்ந்து குழந்தைகளும் இணைந்து வண்ணமயமான கோலங்களை இட்டு மகிழ்வர்.

கண்கொள்ளா காட்சி

கோலங்களில் புள்ளி வைத்து போடும் கோலம், ரங்கோலி, சிக்குக்கோலம், உருவ கோலம் இன்னும் பல வகையான கோலங்கள் உள்ளன. மார்கழி மாதம் முழுவதும் வண்ண கோலமிட்டு அந்த பகுதியே பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.

வருகிற 16-ந் தேதி மார்கழி பிறக்கிறது.

இதையொட்டி தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர், தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோலப்ெபாடி தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

விற்பனை அதிகரிப்பு

இதுகுறித்து கோலப்பொடி தயாரிப்பாளர் மாடசாமி கூறியதாவது:-

ஆண்டுதோறும் கோலப்பொடி விற்பனை நடைபெறுவது வழக்கம். ஆனால் மார்கழி மாதம் முதல் தை மாதம் வரை கோலப்பொடி விற்பனை வழக்கத்தை விட 5 மடங்கு அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை அதிகரித்து உள்ளது. ஒரு பாக்கெட் கோலப்பொடி ரூ.10-க்கு விற்பனை செய்கிறோம்.

கோலப்பொடி தயாரிக்கும் தொழிலில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் கோலப்பொடிகள் வெளியூர்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கிறோம். அதிலும் குறிப்பாக மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்கு அதிக அளவில் அனுப்பி வைக்கின்றோம். தினமும் ரூ. 200 முதல் ரூ. 300 வரை லாபம் கிடைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோலப்பொடி தயாரிக்கும் பணி தீவிரம்

அதேபோல தாயில்பட்டி அருகே உள்ள வெற்றிலையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு ஆணை கூட்டம் பகுதியில் மார்கழி மாதம் மற்றும் புத்தாண்டு, தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்ணக்கோலப்பொடிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து தெற்கு ஆணை கூட்டத்தை சேர்ந்த கார்த்திக் கூறியதாவது:-

மார்கழி மாதத்தை முன்னிட்டு பல்வேறு வகையான கோலப்பொடிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கோலப்பொடி பாக்கெட் ரூ. 5 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தை பொங்கலை முன்னிட்டு கோவிலுக்கு முன்பாக பெண்கள் கோலமிடுவது வழக்கம். அதேபோல கோலப்போட்டிகள் அதிக அளவில் நடைபெறும். எனவே மார்கழி, தை மாதங்களில் மற்ற மாதங்களை விட விற்பனை அதிகமாக இருக்கும். இங்கிருந்து தூத்துக்குடி, தென்காசி, திருச்சி, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story