விராலிமலை முருகன் கோவிலில் லிப்ட் அமைக்கும் பணி மீண்டும் தொடக்கம்
விராலிமலை முருகன் கோவிலில் லிப்ட் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
விராலிமலை முருகன் கோவில்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குவது விராலிமலை முருகன் கோவிலாகும். இங்கு மலைமேல் முருகன், வள்ளி-தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு அருணகிரிநாதருக்கு முருகன் காட்சி தந்து திருப்புகழ் பாடவைத்த தலமாகவும், நாரதருக்கு பாவ விமோச்சனம் தந்த தலமாகவும் விளங்குகிறது.
இத்தனை சிறப்புகள் கொண்ட இக்கோவிலில் பக்தர்களின் வசதிக்காக ரூ.3 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மலைப்பாதை அமைக்கப்பட்டு மலைமேல் வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளன.
லிப்ட் அமைக்கும் பணி
மேலும் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் சாமி தரிசனம் செய்யும் வகையில் வாகனம் நிறுத்துமிடத்திலிருந்து 2 லிப்ட் அமைக்கும் பணியானது நடைபெற்று வந்தது. இந்தநிலையில் ஒருசில காரணங்களுக்காக இந்த பணி நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் லிப்ட் வசதியை விரைந்து முடிக்க வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தலின்பேரில் தற்போது கட்டிடப்பணி மற்றும் லிப்ட் அமைக்கும் பணிக்கு ரூ.65 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு மீண்டும் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைந்து முடிந்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வந்துவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.