பாம்பன் புதிய தூக்குப்பாலத்திற்கான 'டவர்' பொருத்தும் பணி தொடங்கியது


பாம்பன் புதிய தூக்குப்பாலத்திற்கான டவர் பொருத்தும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 23 Jun 2023 1:08 AM IST (Updated: 23 Jun 2023 5:10 PM IST)
t-max-icont-min-icon

பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலத்தின் மையப் பகுதியில் அமைய உள்ள புதிய தூக்குப்பாலத்திற்கான 'டவர்' பொருத்தும் பணி தொடங்கியது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலத்தின் மையப் பகுதியில் அமைய உள்ள புதிய தூக்குப்பாலத்திற்கான 'டவர்' பொருத்தும் பணி தொடங்கியது.

புதிய ரெயில் பாலம்

மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. அதுபோல் இந்த பாலம் 105 ஆண்டுகளை கடந்து மிகவும் பழமையான பாலம் ஆகிவிட்டதால் இந்த பாலத்தின் அருகிலேயே உள்ள வடக்கு கடல் பகுதியில் சுமார் 50 மீட்டர் தூரத்தில் ரூ.450 கோடி நிதியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாகவே நடைபெற்று வருகின்றன.

இதில் இதுவரையிலும் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு கடலில் சுமார் 333 தூண்கள் அமைக்கும் பணிகள் முழுமையாக முடிவடைந்து விட்டன. அதுபோல் மண்டபத்தில் இருந்து மையப்பகுதியில் அமையுள்ள தூக்குப்பாலம் வரையிலான தூண்கள் மீது இரும்பு கர்டர் பொருத்தியும் அதன் மீது தண்டவாளம் பொருத்தும் பணிகளும் ஒரு பகுதியில் முடிவடைந்து விட்டன.

டவர்

மேலும் மையப்பகுதியில் அமையவுள்ள புதிய தூக்கு பாலத்தின் உபகரணங்களை பாம்பன் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு பொருத்தும் பணியானது தொடங்கி ஒரு புறம் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் புதிய தூக்குப்பாலத்திற்கான உபகரணங்களை பொருத்தும் பணியானது நேற்று முதல் தொடங்கியது.

முதல் கட்டமாக மையப் பகுதியில் கடலுக்குள் போடப்பட்டுள்ள மேற்கு பகுதியில் உள்ள தூண்கள் மீது டவர் வைப்பதற்கான உபகரணங்கள் கிரேன் மூலம் நேற்று தூக்கி பொருத்தப்பட்டது.

இது குறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, பாம்பன் கடலில் நடைபெற்று வரும் புதிய ரெயில் பாலத்தின் மையப் பகுதியில் சுமார் 70 மீட்டர் நீளத்திலும், 520 டன் எடையிலும் தூக்குப்பாலம் அமைய உள்ளது. அது போல் இந்த தூக்கு பாலத்திற்கான உபகரணங்கள் பாம்பன் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு அதை வெல்டிங் செய்து ஒன்றிணைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. இதனிடையே மையப் பகுதியில் கடலில் அமைய உள்ள தூக்குப்பாலத்திற்கான உபகரணங்களை தூண்களில் பொருத்தும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

4 இடங்களில்..

இதில் மையப் பகுதியில் உள்ள தூண்களில் 4 இடங்களில் 34 மீட்டர் உயரத்தில் டவர் அமைய உள்ளது. தற்போது டவர் அமைக்கும் பணியானது கிரேன் மூலம் தூண்கள் மீது வைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது. மையப்பகுதி தூண்களில் அமைய உள்ள இந்த டவரில்தான் தூக்குப் பாலத்தை மேலே திறந்து மூடும் வகையிலான ரோப் மற்றும் லிப்ட் வசதிகளும் படிக்கட்டுகளும் உள்ளிட்டவை இடம்பெறுகின்றது. இந்த பணியானது இன்னும் ஒரு மாதத்தில் முடிவடையும். தொடர்ந்து பாம்பன் பகுதியில் வைத்து நடைபெற்று வரும் தூக்குப்பாலத்தை நகரும் கிரேன் மூலம் மையப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டு பொருத்தும் பணியும் நடைபெறும். ஆசியாவிலேயே கடலில் வெர்டிகல் டைப்பில் திறந்து மூடும் வகையில் கட்டப்படும் முதல் தூக்குப்பாலம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story