உலகத்தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி விரைவில் தொடக்கம்


உலகத்தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி விரைவில் தொடக்கம்
x

உலகத்தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

அரியலூர்

மீன்சுருட்டி:

அருங்காட்சியகம்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில் அரசு அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பதற்கான இடங்களை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை அரசு முதன்மை செயலாளர் மணிவாசன், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, அருங்காட்சியக ஆணையர் அரவிந்த், எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, க.சொ.க.கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர். ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு, நிருபர்களிடம் கூறியதாவது:-

இடத்தை தேர்வு செய்ய ஆய்வு

கங்கை கொண்ட சோழபுரத்தில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் சார்பாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்து இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்களை நேரடியாக பார்வையிட்டார். அதன் தொடர்ச்சியாக உலக புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழபுரம் கோவிலின் முக்கியத்துவம், குறிப்பாக சோழப் பெருவேந்தர்களில் தனக்கென மிகப்பெரிய இடத்தினை பிடித்த மாமன்னன் ராஜேந்திர சோழனுடைய பெருமையை பறைசாற்றும் வகையில் கங்கை கொண்ட சோழபுரத்தில் உலகத் தரத்திலான ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார்.மேலும் இந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பொருட்டு தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கங்கை கொண்ட சோழபுரம் கோவிலின் அருகில் உள்ள இடமும், குருவாலப்பர்கோவில் அருகே உள்ள மற்றொரு இடமும் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த 2 இடங்களில் எந்த இடம் மிகவும் சிறப்பாக இருக்கும், அதிகப்படியான பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும் என்பதை முடிவு செய்து பணிகள் தொடங்கப்படும்.

விரைவில் முடிக்க நடவடிக்கை

சோழர்களின் புகழை குறிப்பாக ராஜேந்திர சோழனுடைய புகழை பறைசாற்றும் வகையிலும், கங்கை கொண்ட சோழபுரத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையிலும் இந்த அருங்காட்சியகம் அமைய வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மாளிகைமேடு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்களை பார்வையிட்டு, அவற்றின் விவரம் குறித்து கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து உட்கோட்டை பகுதியில் நடைபெறும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டு, அங்கு கண்டெடுக்கப்பட்ட மதில் சுவருக்கு நிறுத்தப்பட்டதாக கருதப்படும் 7 மீட்டர் நீளம், 72 செ.மீ அகலமுடைய கல்தூணை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது அகழாய்வு பணிகள் இணை இயக்குனர் (சென்னை) சிவானந்தம், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் (கடலூர்) பரணிதரன், அகழாய்வு பணிகள் இயக்குனர் பிரபாகரன், துணை இயக்குனர் பாக்கியலெட்சுமி, உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Next Story