பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரம்
வேலூர் கோட்டை பின்புறத்தில் பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.
வேலூர் கோட்டை வரலாற்று சிறப்பு மிகுந்த கோட்டைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏராளமான வெளிமாநிலத்தவர்கள் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கோட்டையை சுற்றி பார்க்க தினமும் வந்து செல்வார்கள். அவற்றில் ஒரு சிலர் பொழுதுபோக்கிற்காக கோட்டை முன்புள்ள பூங்காவில் அமர்கின்றனர்.
இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோட்டை பூங்கா பராமரிக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. அவற்றில் கோட்டை அகழி கரையோரம் சுற்றி உள்ள செடி, கொடிகள் அகற்றும் பணிகள் நடக்கிறது. மேலும் கோட்டை பின்புறம் பூங்கா அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் முதற்கட்டமாக அங்குள்ள காய்ந்து கிடக்கும் புற்கள் செடி, கொடிகள் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் அமர்வதற்கு வசதியாக தண்ணீர் பாய்ச்சி புற்கள் மற்றும் வண்ண மலர் செடிகள் வளர்த்து வருகின்றனர்.