தொழிலாளி அடித்துக்கொலை
தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
தா.பேட்டை :
திருச்சி மாவட்டம், தா.பேட்டையை அடுத்த முத்துராஜா பாளையம் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன் (வயது 67). கூலித்தொழிலாளி. இவரது மகன் கார்த்திக். இவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த அஜித் என்பவர் புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளுக்கு மாலை வாங்குவதற்காக மேட்டுப்பாளையத்திற்கு கார்த்திக், அஜித்துடன் நேற்று மாலை சென்றார்.
அப்போது 18 வயது சிறுவன், குடிபோதையில் கார்த்திக்கிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த சிறுவன் மீண்டும் கார்த்திக் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவர்களிடையே மோதல் ஏற்பட்டதால், அவர்களை ஸ்ரீரங்கன் தடுத்து விலக்கியுள்ளார். அப்போது சிறுவன் மற்றும் அவரது உறவினரான லாரி டிரைவர் விஜயகுமார் (30) ஆகியோர் குச்சியால் தாக்கியதில், நெற்றியில் காயமடைந்த ஸ்ரீரங்கன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தில் அந்த சிறுவனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தா.பேட்டை இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று ஸ்ரீரங்கனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து சிறுவன், விஜயகுமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனின் தாய்-தந்தை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதால், சிறுவன் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.