ரெயிலில் அடிபட்டு தொழிலாளியின் கை துண்டானது
ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் அடிபட்டு தொழிலாளியின் கை துண்டானது.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பாச்சல் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ (வயது 55), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு பாய்ச்சல் பகுதியில் திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற ஏதோ ஒரு ரெயிலில் சிக்கி இடது கை துண்டானது. இதில் அவர் வலியால் கூச்சல் போடவே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு துண்டான கையுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
அங்கு துண்டான கையை இணைக்க ஐஸ் பாக்சில் வைத்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அடிபட்டு 6 மணி நேரத்திற்குள் வந்தால் மட்டுமே கையை இணைக்க முடியும் என கூறினர். மேலும் கையை இணைக்க முடியமல் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.