அனல்மின் நிலைய தொழிலாளர்கள் தலையில் நாற்காலியை சுமந்து கொண்டு மாற்று இடத்துக்கு சென்று போராட்டம்


அனல்மின் நிலைய தொழிலாளர்கள் தலையில் நாற்காலியை சுமந்து கொண்டு மாற்று இடத்துக்கு சென்று போராட்டம்
x
தினத்தந்தி 18 Feb 2023 12:15 AM IST (Updated: 18 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின்நிலைய ஒப்பந்த ஊழியர்கள் நேற்று தலையில் நாற்காலியை சுமந்து மாற்று இடத்துக்கு நடந்து சென்று மீண்டும் போராட்டத்தை தொடங்கினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின்நிலைய ஒப்பந்த ஊழியர்கள் நேற்று தலையில் நாற்காலியை சுமந்து மாற்று இடத்துக்கு நடந்து சென்று மீண்டும் போராட்டத்தை தொடங்கினர்.

அனல்மின்நிலையம்

தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின்நிலையத்தில் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட 2 மின்உற்பத்தி எந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறைந்த அளவில் சூப்பிரவைசர் உள்ளிட்ட பணிகளில் மட்டுமே நிரந்தர பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் என்.டி.பி.எல் நிர்வாகத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என்.எல்.சி. அனல்மின்நிலையத்தில் வழங்குவது போன்று என்.டி.பி.எல் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும், இ.எஸ்.ஐ, பி.எப் பிடித்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாற்காலியுடன்...

இந்த நிலையில் என்.டி.பி.எல். நிர்வாகம் மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஒப்பந்த ஊழியர்கள் அனல்மின்நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் தாண்டி போராட்டம் நடத்தவும், பணிக்கு செல்லும் தொழிலாளர்களை தடுக்க கூடாது என்றும் உத்தரவிட்டார். இதனால் நேற்று 5-வது நாளாக ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில் அனல்மின்நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள துறைமுக வணிகவளாகம் அருகே அமர்ந்து போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதனால் ஊழியர்கள் அனல்மின்நிலையம் முன்பு இருந்து, தாங்கள் அமர்ந்து இருந்த நாற்காலிகளை தலையில் சுமந்தபடி நடைபயணமாக புதிய போராட்ட இடத்துக்கு வந்து சேர்ந்தனர். அங்கு அவர்கள் அமர்ந்து மீண்டும் போராட்டம் தொடர்ந்தனர்.

நேற்று மாலையில் என்.டி.பி.எல். அனல்மின்நிலைய அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் பிரதிநிதிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை என்.டி.பி.எல். விருந்தினர் மாளிகையில் நடந்தது. இந்த பேச்சுவார்த்தை இரவு வரை நீடித்தது.


Next Story