விழுப்புரம் பகுதியில்கம்பு விளைச்சல் அமோகம்


விழுப்புரம் பகுதியில்கம்பு விளைச்சல் அமோகம்
x
தினத்தந்தி 5 Aug 2023 12:15 AM IST (Updated: 5 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் பகுதியில் கம்பு அமோகமாக விளைந்துள்ளது.

விழுப்புரம்


சிறுதானிய பயிர்களில் மிகவும் முக்கியமான சத்து மிகுந்த பயிராக கம்பு உள்ளது. தமிழகத்தில் நெல், கோதுமை, சோளத்துக்கு அடுத்தபடியாக பயிரிடப்படும் உணவு பயிர் கம்பு ஆகும். கம்பு குறைந்த நீர்வளம், மண்வளம் உள்ள இடங்களிலும் செழித்து வளரக்கூடியது.

மேலும் உணவு தன்மையிலும் மற்ற தானியங்களை விட அதிகமான சத்துப்பொருட்களை பெற்றுள்ளது. கம்பு தானியமாக மட்டுமல்லாமல் சிறந்த கால்நடை தீவனமாகவும் உள்ளது. அரிசியை மட்டுமே உண்பதால் வரும் சத்து குறைபாட்டை போக்கவும் கம்பு மிகச்சிறந்த தானியமாகும்.

கம்பு விளைச்சல் அமோகம்

இத்தகைய சத்து மிகுந்த கம்பு பயிரை விழுப்புரம் அருகே கல்பட்டு, தெளி, சிறுவாக்கூர், மாம்பழப்பட்டு, ஆலம்பாடி, சென்னகுணம், காரணைபெரிச்சானூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மானாவரியாக விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்த மழையினால் அவை நன்கு செழித்து வளர்ந்து கதிர்களுடன் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளதால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர். அதுபோல் கம்பு அமோகமாக விளைச்சல் அடைந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

உரிய விலை வேண்டும்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், எங்களை போன்ற கம்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கம்புக்கு உரிய விலை கிடைக்கச்செய்ய வேளாண்மை அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.


Next Story