ராணுவ வீரருக்காக ஆள்மாறாட்டம் செய்து அரியர் தேர்வு எழுதிய வாலிபர் சிக்கினார்


ராணுவ வீரருக்காக ஆள்மாறாட்டம் செய்து அரியர் தேர்வு எழுதிய வாலிபர் சிக்கினார்
x

ராணுவ வீரருக்காக ஆள்மாறாட்டம் செய்து அரியர் தேர்வு எழுதிய வாலிபர் சிக்கினார்.

திருச்சி

முசிறி:

அரியர் தேர்வு

திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளில் 3 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கல்லூரியில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த 13-ந் தேதி முதல் பல்கலைக்கழக தேர்வு ெதாடங்கி நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த கல்லூரியில் படித்து முடித்தவர்களில் பாடங்களில் தேர்ச்சி பெறாமல் 'அரியர்' வைத்திருந்த மாணவ, மாணவிகளுக்கும் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்காக ஏற்கனவே தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த மாணவ, மாணவிகளுக்கு ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டிருந்தது. மேலும் 'அரியர்' தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்காக தனியாக தேர்வறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

வாலிபர் மீது சந்தேகம்

அதன்படி மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு வந்து தேர்வு எழுதிச்செல்கின்றனர். தற்போது கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாணவ, மாணவிகள் முககவசம் அணிந்து வந்து தேர்வு எழுதிச்செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அறை எண் 4-ல் மாணவ, மாணவிகள் 'அரியர்' தேர்வை எழுதினர். அந்த அறையின் கண்காணிப்பாளராக வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் பழனிச்சாமி(வயது 44) செயல்பட்டார். அப்போது அந்த அறையில் பி.ஏ. பொருளாதாரம் பாடப்பிரிவில் பாலின பாகுபாடு குறித்த பாடத்திற்கான தேர்வு எழுதிய ஒரு வாலிபரின் மீது அறை கண்காணிப்பாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

ஆள்மாறாட்டம்

இதையடுத்து அவரிடம் இருந்த ஹால்டிக்கெட்டை அறை கண்காணிப்பாளர் பெற்று சரிபார்த்தார். மேலும் தேர்வு எழுதியவரிடம் முககவசத்தை அகற்றுமாறு கூறி, ஹால்டிக்கெட்டில் இடம்பெற்றிருந்த புகைப்படத்தை ஒப்பிட்டு பார்த்தபோது, அவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது தெரியவந்தது.

இது குறித்து முசிறி போலீசில் உதவி பேராசிரியர் பழனிச்சாமி புகார் கொடுத்தார். தேர்வு எழுதிய நபரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து அவரிடம், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் நடத்திய விசாரணையில், அவர் ஜம்புமடை வடக்கு தெருவை சேர்ந்த துரைராஜின் மகன் விசுவநாதன்(32) என்பது தெரியவந்தது.

ராணுவ வீரருக்காக...

மேலும் அவர், ராணுவத்தில் பணிபுரிந்து வரும் தனது நண்பர் கோபிநாத்துக்கு உதவி செய்வதற்காக, அவர் எழுத வேண்டிய தேர்வை அவருக்கு தெரியாமல் அவரது ஹால்டிக்கெட்டை பயன்படுத்தி, தான் எழுத வந்ததாக விசுவநாதன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story