விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் தங்கை கணவர் கைது


விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் தங்கை கணவர் கைது
x

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் கொலை வழக்கில் தங்கையின் கணவர் கைது செய்யப்பட்டார். பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்காததால் கொன்றதாக வாக்குமூலம் அளித்தார்.

சென்னை

சென்னை எண்ணூர் சின்ன எர்ணாவூர் 4-வது தெருவை சேர்ந்தவர் தனசேகர் (வயது 48). பெயிண்டர். விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவருக்கு தீபா (40) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். தீபாவிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனசேகர் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் பூட்டிய வீட்டில் தனசேகர் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து, ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் பிரேத ப‌ரிசோதனை‌க்கு பின்னர் தனசேகர் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரை கொலை செய்தவர்களை கைது செய்யவும் வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் அன்பு செழியன் தலைமையில் திருவொற்றியூர் அம்பேத்கர் நகர் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கொலைக்கு காரணமான மணலி புதுநகர் அருகே பதுங்கி இருந்த சீனிவாசன் என்பவரை போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்தில் கொண்டு வந்து விசாரித்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறும்போது, தனது மனைவியும், தனசேகரின் தங்கையுமான சின்னப்பொண்ணு தன்னை விட்டு பிரிந்து சென்றதால், அவரை தன்னுடன் சேர்ந்து வாழ வைக்கும் படி தனசேகரிடம் கேட்டதாகவும், அதற்கு தனசேகர் மறுத்ததால் ஆத்திரமடைந்த தான், கடந்த 12-ந்தேதி போதையில் தூங்கி கொண்டு இருந்த தனசேகர் மீது கல்லை போட்டு கொலை செய்து விட்டு கொலை செய்ய பயன்படுத்திய கல்லோடு தப்பி சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் சீனிவாசனை கைது செய்தனர்.


Next Story