போதையில் வாழ்வைத் தொலைக்கும் இளைய சமூகம்
புத்தியைத் தடுமாறச் செய்யும் ஒருவித கிறக்கமே போதை. அதை சுகமாகக் கருதி நாடுபவர்கள் வாழ்வைத் தொலைத்துக் கொள்கிறார்கள்.
போதைப்பழக்கத்திற்கு அடிமை
'ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி'
என்கிறார், வள்ளுவர்.
போதைக்கு அடிமையானவரை பெற்ற தாய் கூட சகித்துக் கொள்ள மாட்டாள். அப்படியிருக்கும் போது சமுதாயத்தில் பெரியவர்கள் எப்படி சகித்துக் கொள்வார்கள்? என்று கேட்கிறார். எனவே மனிதன் வெறுத்து ஒதுக்க வேண்டியவற்றில் போதையும் ஒன்று.
போதை தரும் பொருளால் தனிமனித வாழ்வு சீரழிவதோடு நாட்டின் பொருளாதாரமும் சீர்குலைகிறது. இதனால் போதைப் பொருட்களை ஒழிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தாலும் சமுதாயத்தில் போதைப் பொருட்களும் அதன் பயன்பாடும் வேரறுக்க முடியாத ஆலமர விருட்சமாய் வளர்ந்து வருகின்றன. தற்போது இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி சீரழிவதைக் காண முடிகிறது.
நீதிமன்றம் தடை
போதைப்பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு பலதரப்பினரும் கோரிக்கை வைத்தனர். அதன்படி மாநில உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் பிரிவு 30 (2) (ஏ) படி குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவின்படி, புகையிலை நிறுவனத்திற்கு எதிராக அனுப்பப்பட்ட நோட்டீசை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளார். இதனால் ஓரளவு குறைந்து இருந்த போதைப் பொருட்கள் விற்பனை தற்போது அதிகரித்து விட்டதாக போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரையில் வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வர தொடங்கியதற்கு பிறகுதான் போதை பாக்குகளின் நடமாட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. போதைப்பாக்குகளை பயன்படுத்துபவர்கள் பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, ரெயில்வே பிளாட்பாரம், கோவில் வளாகம், சந்தை, பொது கழிப்பிடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பாக்குகளை சுவைத்து உமிழ்வதால் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது.
பொது இடங்களில் இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொள்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர். அதுபற்றி காண்போம்.
சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்:- பான்பராக், குட்கா போன்றவை புற்றுநோய்க்கு ஆதாரமாக இருப்பதுடன், பிறர் உயிர் சம்பந்தப்பட்ட விஷயமாகவும் இருக்கிறது. இது தொடர்பாக வியாபாரிகள் சங்கத்திடம் வேண்டுகோள் விடுத்து உள்ளோம். சுப்ரீம் கோர்ட்டிலும் மேல் முறையீடு செய்யவும் இருக்கிறோம். தற்போது இருக்கும் சட்டத்தால் இதனை தடை செய்ய முடியவில்லை என்றால், எந்த வழியிலும் திரும்பவும் விற்பனைக்கு வந்து இளைய சமுதாயத்தினரை பாதிக்காத வகையில், சட்டசபையில் விவாதித்து புதிய சட்டத்தை கொண்டு வரவும் முதல்-அமைச்சர் விருப்பம் தெரிவித்து உள்ளார்.
அறியாமையில் இளைஞர்கள்
ஐகோர்ட்டில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு தொடர்பான வழக்குகளை நடத்தி வரும் வக்கீல் எம்.கோவிந்தராஜூ:- போதைப்பொருள் பயன்படுத்துவது, விற்பது போன்ற குற்றச்செயல்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்க சட்டத்தில் இடமிருக்கிறது. உலகத்தில் அனைத்து நாடுகளிலும் உள்ள சட்டங்களில் மிகவும் கடுமையான சட்டம் நம் நாட்டில் உள்ள 'போதை மருந்துகள் மற்றும் உளவெறியூட்டும் பொருட்கள் சட்டம்- 1985' (என்.டி.பி.எஸ். சட்டம்). இந்த சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் தண்டனைகள் மிகவும் கடுமையானவை. குறிப்பாக 10 ஆண்டுகள் சிறையும், ரூ.1 லட்சத்துக்கு மேல் அபராதமும் விதிக்கப்படுகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. இதில் 20 வயது முதல் 30 வயது உள்ள நல்ல குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமையால் அறியாமையால் இது போன்ற தவறுகளை செய்து வழக்குகளில் சிக்கி கொள்கின்றனர். போதைத் தடுப்பு விஷயத்தில் நீதிமன்றமும் கண்டிப்புடன் இருப்பதால் ஜாமீன் கூட கிடைப்பதில்லை. போலீசாரும் தற்போது விழிப்புணர்வுடன் இருந்து போதைப் பொருட்கள் தொடர்புடைய வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுகின்றனர். அவர்களுக்கு உரிய தண்டனையும் வழங்கப்படுகிறது. இதுபோன்ற வழக்குகளில் இளைஞர்கள் சிக்காமல் படிப்புக்கு ஏற்ற வேலையைத் தேடி நேர்மையான முறையில் உழைத்து முன்னுக்கு வரவேண்டும்.
புற்றுநோய் தடுப்பு
புற்றுநோயில் இருந்து மீண்டு வந்து விழிப்புணர்வு அளித்து வரும் சர்புதீன்:- புகைப்பழக்கமும், பாக்கு போடும் பழக்கம் எனக்கு இருந்து வந்தது. இதனால் பேச முடியாத நிலை ஏற்படும் என்று கனவில் கூட நினைக்கவில்லை. ஆனால் திடீரென்று எனது குரல் வளையில் புற்றுநோய் ஏற்பட்டு பேச முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டேன். கடவுள் புண்ணியத்தாலும், அடையாறு புற்றுநோய் தடுப்பு மருத்துவமனை மருத்துவர்களின் உதவியால் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்து உள்ளேன். தற்போது தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று புகையிலை எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு அளித்து வருகிறேன். பள்ளியில்தான் இந்தப்பழக்கம் முதன் முதலில் ஆரம்பிக்கிறது. இதனை தடுப்பதற்காக மாணவர்கள் மத்தியில் புற்றுநோயின் கொடுமை குறித்து அதிகம் எடுத்துக் கூறி வருகிறோம். இளைஞர்கள் புகையிலை பழக்கத்தில் சிக்காமல் இருக்க வேண்டும்.
போதை மறுவாழ்வு மையம் அதிகரிப்பு
இந்திய மருத்துவ சங்கத்தின் பெரம்பலூர் கிளை தலைவர் டாக்டர் வல்லபன்:- புகையிலை பொருட்கள் (மெல்லக்கூடிய குட்கா, பான்பராக்) உட்கொள்வதாலும், சிகரெட், பீடி ஆகியவற்றை பிடிப்பதாலும் புத்துணர்ச்சி கிடைப்பதாக தவறான எண்ணம் இளைஞர்களிடம் நிலவி வருகிறது. புகையிலை பொருட்களினால் உடலுக்கு தீங்கு ஏற்படும் என்று தெரிந்தும் அவர்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர். சிலர் ஸ்டைலுக்கு சிகரெட் புகைக்கின்றனர். தற்போது தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களில் பெரும்பாலனோர் புகையிலை பொருட்களை பயன்படுத்துகின்றனர். அவர்களை கண்டு தமிழக இளைஞர்களில் சிலரும் புதிதாக புகையிலை பொருட்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்களை உட்கொள்பவர்கள் அந்த எச்சிலை கண்ட இடங்களில் துப்புகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றனர். பொது இடங்களிலும், பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றின் அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் எளிதாக கிடைத்து வருவதால் இளைஞர்கள் அதற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் போதை மறுவாழ்வு மையம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. புகையிலை பொருட்களில் இருந்து இளைய சமுதாயத்தை காக்க சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கும் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு விற்பனை தடையை நீக்கிய சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு கொண்டு வர இருக்கும் சட்ட திருத்த மசோதாவை ஆதரிப்போம்.
மன உளைச்சல்
குன்னம் பகுதியை சேர்ந்த காமராசு:- கொரோனா காலத்திற்கு பிறகு இளைஞர்களிடம் குட்கா பான்பராக் ஆகிய புகையிலை பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சரியாக கவனிக்க இயலாமல் போனதே ஆகும். போதை வஸ்துகளுக்கு அடிமையாகும் இளைஞர்கள் அதில் இருந்து மீண்டு வர முடியாமல் உள்ளனர். மேலும் இவர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருப்பார்கள். அடுத்தவர்கள் யாரையும் எளிதில் அருகே விடமாட்டார்கள். யாரும் தங்களை கேள்வி கேட்கக்கூடாது என்ற மனநிலையில் இருப்பார்கள். வாய் புற்றுநோய் ஏற்பட்டால் குணமடைவது மிகவும் கடினம். எனவே இளைஞர்கள் இந்த பழக்கத்திலிருந்து தாங்களாகவே நிறுத்திக்கொள்வது நல்லது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.