உதவி கலெக்டர் முன் வாலிபர் மீண்டும் ஆஜர்-2 மணி நேரம் விசாரணை
பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சேரன்மாதேவி உதவி கலெக்டர் முன் வாலிபர் நேற்று மீண்டும் ஆஜர் ஆனார். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடந்தது.
சேரன்மாதேவி:
பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சேரன்மாதேவி உதவி கலெக்டர் முன் வாலிபர் நேற்று மீண்டும் ஆஜர் ஆனார். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடந்தது.
பற்களை பிடுங்கிய விவகாரம்
நெல்லை மாவட்டம் அம்பை காவல் உட்கோட்ட பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களின் எல்லைப்பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த பல்வீர்சிங் என்பவர் பற்களை கொடூரமாக பிடுங்கியதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து அவர் காத்திருந்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையி்ல், பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பான விசாரணை அதிகாரியாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் நியமிக்கப்பட்டு அவர் விசாரணை நடத்தி வருகிறார்.
உதவி கலெக்டர் அறிவிப்பு
உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் முன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், பாதிக்கப்பட்டதாக கூறப்படுவோர் என இதுவரை 8 பேர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த விசாரணை வருகிற 10-ந்தேதி வரை நடைபெறும் என உதவி கலெக்டர் அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட நபர்கள் அல்லது இதுதொடர்பாக சாட்சியம் தெரிவிக்க விரும்புவோர் தங்களது எழுத்துப்பூர்வமான மனுவை தாக்கல் செய்யலாம், என உதவி கலெக்டர் அறிவித்துள்ளார்.
மீண்டும் ஆஜர்
இதற்கிடையே நேற்று முன்தினம் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலைய பகுதியை சேர்ந்த வாலிபர் வெங்கடேஷ் என்பவர் ஆஜரானார். சம்பவம் குறித்து அவர் விளக்கம் அளித்ததாக தெரிகிறது.
உதவி கலெக்டர் முன் நேற்று முன்தினம் ஆஜரான வெங்கடேஷ் மீண்டும் நேற்று ஆஜரானார். அவரிடம் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து வெளியே வந்த வெங்கடேஷ் எதுவும் பேசாமல் சென்று விட்டார்.