வீடு புகுந்து திருடிய வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி
திருக்கோவிலூர் அருகே வீடு புகுந்து திருடிய வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். அவர் தப்பி ஓட முயன்றதால் முகத்தில் மிளகாய் பொடியை தூவிய சம்பவம் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ளது
திருக்கோவிலூர்
வீட்டை பூட்டிவிட்டு...
திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் சத்தியகண்டனூர் கிராமம் அரவிந்த் நகரை சேர்ந்தவர் ராமன் மகன் சக்திவேல் (வயது 45). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு சொந்த வேலையாக திருக்கோவிலூர் சென்றுவிட்டு அங்கிருந்து இரவு 11 மணியளவில் வீட்டுக்கு வந்தார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக்திவேல் வீட்டின் உள்ளே செல்ல முயன்றார். அப்போது வீட்டின் உள்ளே இருந்து வேளியே ஓடி வந்த மர்ம நபர் ஒருவர் சக்திவேலை தள்ளிவிட்டு தப்பி ஓடினார். இதைப்பார்த்து சக்திவேல் திருடன் திருடன் என கூச்சலிட்டார்.
தர்ம அடி கொடுத்தனர்
இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இவர்களைகண்டதும் வீ்ட்டின் உள்ளே இருந்து தப்பி செல்ல முயன்ற இன்னொரு மர்ம நபர் உள்ளேயே பதுங்கி இருந்தார்.
பின்னர் அக்கம்பக்கத்தினர் சக்திவேலின் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கே பதுங்கி இருந்த வாலிபர் தப்பி ஓட முன்றார். உடனே பொதுமக்கள் அவரை பிடித்து தப்பி செல்லாமல் இருப்பதற்காக அவரது முகத்தில் மிளகாய் பொடியை தூவி தர்ம அடி கொடுத்தனர். இதனால் எரிச்சல் மற்றும் வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். பின்னர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த அரகண்டநல்லூா் போலீசார் அந்த மர்மநபரை சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் நேமூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்புராயன் மகன் முரளி என்கிற முனுசாமி(வயது 20) என்பதும், தப்பி ஓடியவர் அதே ஊரை சேர்ந்த துரை(40) என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் இருவரும் சேர்ந்து வீட்டில் திருட முயன்றபோது சக்திவேல் வந்ததால் அவரை துரை தள்ளிவிட்டு ரூ.30 ஆயிரத்துடன் தப்பி ஓடியதும், திருடிய மூக்குத்தியுடன் வீட்டின் உள்ளே பதுங்கி இருந்த முரளி பொதுமக்களிடம் பிடிபட்டதும் தொியவந்தது.
கைது
இதையடுத்து முரளியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மூக்குத்தியை கைப்பற்றினர். மேலும் இது தொடா்பாக போலீசார் வழக்குப்பதிவுசெய்து தப்பி ஓடிய துரையை வலைவீசி தேடி வருகிறாா்கள். வீடு புகுந்து திருடிய வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் சத்தியகண்டனூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.