விசாரணைக்கு அழைத்து வந்த வாலிபர் தப்பியோட்டம்
விசாரணைக்கு அழைத்து வந்த வாலிபர் தப்பியோட்டம்
கோவை, ஜூன்.21-
கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ஜீவா (வயது 22). இவர் தனது அண்ணன் மற்றும் நண்பர்களுடன் அமர்ந்து பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். அப்போது அவர்களுக்குள் திடீரென்று தகராறு ஏற்பட்டது. இதில் ஜீவா தனது அண்ணனுடன் சேர்ந்து சுரேஷ்குமார் என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஜீவா ஆர்.எஸ்.புரத்தில் ஒரு பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் நேற்று மதியம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜீவாவை பிடித்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அங்குள்ள அம்மணியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது திடீரென்று ஜீவா அங்கிருந்து தப்பியோடினார். உடனே சுதாரித்துக்கொண்ட போலீஸ்காரர் அராபத்அலி அவரை துரத்திச்சென்றார். அப்போது ஜீவா பள்ளியின் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்தார். அந்த சுற்றுச்சுவரில் கண்ணாடி துண்டுகள் பதிக்கப்பட்டு இருந்ததால் அது ஜீவா கையில் குத்தியதில் காயம் ஏற்பட்டது.
அதுபோன்று போலீஸ்காரர் அராபத் அலிக்கும் லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜீவாவை பிடித்தார். தொடர்ந்து 2 பேரும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றனர். தொடர்ந்து ஜீவாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது