பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக தாக்கிய வாலிபர்கள்


பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக தாக்கிய வாலிபர்கள்
x

உளுந்தூர்பேட்டையில் வாகனத்துக்கு பெட்ரோல் போட வரிசையில் வருமாறு கூறியதால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

பெட்ரோல் பங்க்

உளுந்தூர்பேட்டை-சென்னை மெயின் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் அதே பகுதியை சேர்ந்த ராமர் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலையில் வழக்கம்போல வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் தங்கள் வாகனத்துக்கு அவசரமாக பெட்ரோல் போடும்படி ராமரிடம் கூறினர். ஆனால் அவரோ வரிசையில் வருமாறு கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் எங்களையா வரிசையில் வர சொல்கிறாய் என்று கூறி மிரட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

சரமாரி தாக்குதல்

சில நிமிடங்களுக்கு பிறகு திரும்பி வந்த வாலிபர்கள் ஆத்திரம் தாங்காமல் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டிருந்த ராமரை சரமாரியாக தாக்க தொடங்கினர். இதைப்பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் சக ஊழியர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்ப முயன்றனர்.

ஆனால் திமிறி கொண்டு வந்த இளைஞர்கள் அப்பாவி பெட்ரோல் பங்க் ஊழியர் ராமரை சரமாரியாக தாக்கினர். ஒரு கட்டத்தில் புட்பால் அடிப்பது போல அவரை ஓடி வந்து எட்டி உதைத்து கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர்.

போலீசார் விசாரணை

இதற்கிடையே இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் பெட்ரோல் பங்க் ஊழியர் ராமர் மற்றும் சக ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் ராமரை இரு வாலிபர்கள் தாக்கியது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது அந்த காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

பின்னர் இது குறித்து ராமர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் பங்க் ஊழியர் ராமரை தாக்கிய வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பரபரப்பு

பெட்ரோல் நிரப்ப வரிசையில் வருமாறு கூறிய பெட்ரோல் பங்க் ஊழியரை வாலிபர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story