ஓட்டல் ஊழியரிடம் செல்போன் பறித்த வாலிபர்கள்
ஓட்டல் ஊழியரிடம் செல்போன் பறித்த வாலிபர்களை போலீசார் விரட்டி பிடித்தனர்.
செல்போன் பறிப்பு
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 19). இவர் திருவானைக்காவலில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, ஓட்டல் வாசலில் நின்று தனது குடும்பத்தினருடன் செல்போனில் ஆனந்த் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், ஆனந்தின் செல்போனை பறித்துக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து உடனடியாக குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இந்திராகாந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மைக் மூலம் இரவு ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
விரட்டிப்பிடித்த போலீசார்
இதற்கிடையே திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அருகே திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் இரவு ரோந்து பணியில் இருந்தனர். அப்போது, பெரியார் சிலை அருகே அதே 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து, நடந்து சென்ற ஒருவரிடம் செல்போனை பறிக்க முயன்றனர். உடனே சுதாரித்த அந்த நபர், செல்போனை பறிக்க முயன்ற வாலிபரின் கையை இறுக்கமாக பற்றி இழுக்கவே, 3 பேரும் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தனர்.
இதில் சுதாரித்துக்கொண்டு எழுந்த 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இதைப்பார்த்த கண்டோன்மெண்ட் போலீசார், அவர்களை சினிமா பாணியில் விரட்டிச்சென்று பிடித்தனர். அதற்குள் மோட்டார் சைக்கிள் அருகே கீழே விழுந்து கிடந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட 2 பேரிடமும் நடத்திய விசாரணையில், அவர்கள் ஏர்போர்ட் வசந்தநகரை சேர்ந்த நடராஜனின் மகன் அஜய்ராஜ்(20), காஜாநகரை சேர்ந்த விக்னேஸ்வரன்(22) என்பதும், தப்பி ஓடியவர் திருச்சி ரெயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
2 பேர் கைது
மேலும், அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை அடையாளம் கண்டுவிடாமல் இருக்க நம்பர் பிளேட்டில் துணி மற்றும் பிளாஸ்டிக் பையை சுற்றி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அஜய்ராஜ், விக்னேஸ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ஆனந்தின் செல்போன் மற்றும் வழிப்பறி சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் நேற்று முன்தினம் இரவு மத்திய பஸ் நிலையம், திருவானைக்காவல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.