தர்மபுரியில் பட்டப்பகலில்மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.5 லட்சம் துணிகர திருட்டு
தர்மபுரியில் ஓய்வு பெற்ற வன ஊழியரிடம் ரூ.5 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஓய்வு பெற்ற வன ஊழியர்
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை பகுதியை சேர்ந்தவர் டேவிட் (வயது 61). ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியர். இவர் தர்மபுரி- சேலம் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.5 லட்சத்தை எடுத்தார்.
பின்னர் அந்த பணத்தை காலை 11.30 மணி அளவில் வங்கியின் வெளிப்பகுதியில் நிறுத்தி இருந்த தனது மோட்டார் சைக்கிளில் வைத்துவிட்டு ஏ.டி.எம். மையத்திற்குள் சென்றார். சிறிது நேரத்துக்கு பின்னர் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த பணம் மாயமாகி இருந்தது.
போலீசார் விசாரணை
அந்த பகுதியில் தேடிப் பார்த்தபோதும் பணம் கிடைக்கவில்லை. இவர் பணத்தை மோட்டார் சைக்கிளில் வைப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டேவிட் இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்?என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.