தேன்கனிக்கோட்டையில் அடுத்தடுத்து 2 கோவில்களில் திருட்டு போலீசார் விசாரணை
தேன்கனிக்கோட்டையில் அடுத்தடுத்து 2 கோவில்களில் திருட்டு போலீசார் விசாரணை
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்குட்பட்ட இருதுக்கோட்டை அருகே சம்பந்தகோட்டை கிராமத்தில் மத்தூரம்மா கோவில் உள்ளது. இந்த கோவிலில் அந்த பகுதியை சேர்ந்த ரங்கப்பா பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு பூஜையை முடித்து விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் நகை, 1½ கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசில் பூசாரி ரங்கப்பா புகார் கொடுத்தார்.
இதேபோல் சம்பந்தகோட்டையில் உள்ள மாரியம்மன் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் வெள்ளி பொருட்களை திருடி சென்றனர். இதுதொடர்பாக அந்த கோவில் பூசாரி மாரப்பா தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து 2 கோவில்களில் திருட்டு சம்பவம் நடந்தது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.