தாளவாடி அருகே பரபரப்பு: ஒரே நாளில் 2 கோவில்களின் உண்டியலை உடைத்து திருட்டு- டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் கொள்ளை


தாளவாடி அருகே பரபரப்பு: ஒரே நாளில் 2 கோவில்களின் உண்டியலை உடைத்து திருட்டு- டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் கொள்ளை
x

தாளவாடி அருகே ஒரே நாளில் 2 கோவில்களில் உண்டியலை உடைத்து காணிக்கையை திருடியதுடன், டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த மதுபாட்டில்களையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

ஈரோடு

தாளவாடி

தாளவாடி அருகே ஒரே நாளில் 2 கோவில்களில் உண்டியலை உடைத்து காணிக்கையை திருடியதுடன், டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த மதுபாட்டில்களையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

சாமுண்டீஸ்வரி கோவில்

தாளவாடியை அடுத்த ஓங்கன்புரம் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறும். அப்போது கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

இந்த நிலையில் நேற்று காலை சாமி கும்பிட கோவிலுக்கு பக்தர்கள் சிலர் வந்து உள்ளனர். அப்போது கோவில் கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்குள்ள உண்டியலை உடைத்து காணிக்கையை திருடி சென்றனர். ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் உண்டியலில் காணிக்கை இருக்கும் என கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.

மேலும் பீம்ராஜ் நகரில் உள்ள மாரியம்மன் கோவில் உண்டியலும் உடைக்கப்பட்டு அதில் உள்ள காணிக்கையையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

டாஸ்மாக் கடை

இதேபோல் தாளவாடியில் இருந்து சாம்ராஜ்நகர் செல்லும் சாலையில் ராமாபுரம் பிரிவு அருகே உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.15 ஆயிரத்து 580 மதிப்பிலான மதுபாட்டில்களையும் திருடி சென்றனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு அய்மன் ஜமால், தாளவாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திருட்டு நடந்த கோவில்கள் மற்றும் டாஸ்மாக் கடையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் மோப்ப நாய் வீரா, சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடிக்க வைக்கப்பட்டது. சிறிது தூரம் வரை மோப்ப நாய் வீரா ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அதுமட்டுமின்றி கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

பரபரப்பு

மேலும் திருட்டு சம்பவங்கள் நடந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

2 கோவில்கள் மற்றும் டாஸ்மாக் கடையில் நடந்த திருட்டு சம்பவங்கள் தாளவாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story