திருச்சி அருகே பூட்டிய கடையில் திருட்டு; போலீசில் சிக்காமல் இருக்க சி.சி.டி.வி. மானிட்டரையும் தூக்கிச் சென்ற மர்ம நபர்
திருச்சி அருகே வாகன உதிரி பாகங்கள் கடையில் ரூ.75 ஆயிரம் பணம் திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 34) இவர் திருச்சி கருமண்டபம் சாலையில் ஆம்னி பேருந்துகள் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
மீண்டும் மறுநாள் காலையில் கடையைத் திறப்பதற்காக வந்து பார்த்துள்ளார். அப்போது முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது ஆங்காங்கே வைத்து இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் கல்லாவில் வைத்திருந்த ரூ. 75 ஆயிரம் பணமும் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருவார்கள் என நினைத்து சி.சி.டி.வி. காட்சிகள் பதிவாகும் மானிட்டரை ஒட்டுமொத்தமாக திருடி தூக்கி செந்தி இருப்பது தெரியவந்தது.
பின்னர் பிரபாகரன் இதுகுறித்து செஷன்ஸ் கோர்ட் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி ஆய்வு செய்தார்கள்.
அப்போது பிரபாகரனின் பக்கத்துக் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் மர்ம நபர் ஒருவர் வந்து பிரபாகரனின் கடையின் பூட்டை உடைத்து பொருட்களை திருடி சென்றிருப்பது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
பின்னர் இதுகுறித்து செஷன்ஸ் கோர்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் திருடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.