எஸ்.புதூர் அருகே அடுத்தடுத்த கடைகளில் திருட்டு
எஸ்.புதூர் அருகே அடுத்தடுத்த கடைகளில் பூட்டை உடைத்து திருடிய திருடன் அந்த கடைகளுக்கு புதிய பூட்டை போட்டு பூட்டி சென்றுள்ளான்.
எஸ்.புதூர்
கடைகள்
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது நாகமங்கலம் கிராமம். இங்குள்ள அணுகுசாலை ஓரமாக 10-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு கடைக்காரர்கள் வழக்கம்போல் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி சென்றனர். நேற்று காலையில் இ்ப்பகுதியில் உள்ள அரிசி கடைக்காரர் வழக்கம் போல் கடையை திறக்க வந்தார்.
அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். திருட வந்த நபர் அரிசி கடையில் உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்ததால் உள்ளே நுழைய முடியாமல் சென்றதாக தெரியவந்தது.
அடுத்தடுத்து திருட்டு
அதேபோல் அருகில் இருந்த செல்போன் கடை, ஏ.சி. மெக்கானிக் கடை, டெய்லர் கடை, உரக்கடை என அடுத்தடுத்த கடைகளின் பூட்டு வரிசையாக உடைக்கப்பட்டிருந்தது. நள்ளிரவில் அடுத்தடுத்த கடைகளின் பூட்டை உடைத்த மர்ம நபர் கடைகளின் உள்ளே புகுந்து திருடி சென்றார்.
அதன்படி செல்போன் கடையில் 5 ஸ்மார்ட் போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் என ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களும், ஏ.சி. மெக்கானிக் கடையில் ரூ.5 ஆயிரமும், டெய்லர் கடையில் ரூ.10 ஆயிரமும் திருடப்பட்டுள்ளது. மற்ற 2 கடைகளில் திருடப்படவில்லை.
புதிய பூட்டு போட்ட திருடன்
மேலும் கடைகளின் பூட்டை உடைத்து திருடி சென்ற மர்ம நபர் செல்போன் கடையில் இருந்து புதிய பூட்டுகளையும் திருடினார். அந்த திருடிய பூட்டுகளை கொண்டே தான் உடைத்த கடைகளின் பூட்டுகளுக்கு பதிலாக புதிய பூட்டுகளை பூட்டி சென்றார். அந்த பூட்டுகளின் சாவியையும், பூட்டு உடைக்க பயன்படுத்திய கடப்பாரையையும் அங்கேயே போட்டு சென்றார். இந்த திருட்டு சம்பவம் குறித்து உலகம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாராணி, புழுதிபட்டி சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.