செவிலிமேடு கைலாசநாதர் கோவிலில் திருட்டு
செவிலிமேடு கைலாசநாதர் கோவிலில் திருட்டு நடந்தது. அங்கு இருந்த 10 சாமி சிலைகள் தப்பியது.
கைலாச நாதர் கோவில்
காஞ்சீபுரத்தை அடுத்த செவிலிமேட்டில் பழமை வாய்ந்த காமாட்சி அம்மன் உடனுறை கிழக்கு கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிதம்பரம் நடராஜர் சிலை போலவே தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட நடராஜர் சிலை உள்ளது கூடுதல் சிறப்பாகும்.
இந்த கோவில் கடந்த 2018-ம் ஆண்டு மீண்டும் புனரமைக்கப்பட்டு சிவகாமி அம்பாள், நடன சுந்தரர், நடராஜர், முருகன், பிரதோஷ நாயகர், நாயகி உள்ளிட்ட 6 பஞ்சலோக சிலைகளும், விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை என மொத்தம் 10 சாமி சிலைகள் உள்ளது.
இந்த கோவிலுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.
நேற்று முன்தினம் சூரிய கிரகணத்தையொட்டி உச்சி கால பூஜைக்கு பின் நடை சாத்தப்பட்டது.
திருட்டு
கோவில் அர்ச்சகர் நேற்று காலை கோவிலை திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே இருந்த கதவுக்கான பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் பித்தளை குடத்தில் இருந்த சில்லரை காசுகளை திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து செவிலிமேடு பேரூராட்சி முன்னாள் தலைவர் செல்வராஜ், காஞ்சீபுரம் தாலுகா போலீசாருக்கும், கோவில் செயல் அலுவலர் பூவழகிக்கும் தகவல் தெரிவித்தார்.
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில், காஞ்சீபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டது.
சிலைகள் தப்பியது
கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை போலீசார் ஆராய்ந்து பார்த்தில் 5 பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதில் ஒருவருடைய முகம் மட்டும் பதிவாகி இருந்தது. மற்றவர்கள் முகத்தை மறைத்தபடி இருந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவிலில் இருந்த 6 பஞ்சலோக சிலைகள் உள்பட 10 சிலைகள் பாதுகாப்பாக இருந்தது.