வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

அறந்தாங்கி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
10 பவுன் நகைகள் திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏகணிவயல் கிராமத்தை சேர்ந்தவர் முகம்மது மீராஷா (வயது 43). இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரகுமத் நிஷா. இவர் தனது மகளுடன் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், இருவரும் நேற்று மைவயல் கிராமத்தில் உறவினர் ஒருவரின் குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்கு வீட்டை பூட்டி விட்டு சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் மாலையில் வீட்டிற்கு திரும்பினர். அப்போது வீட்டின் பின் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ரகுமத் நிஷா வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் மடிக்கணினி, ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
வலைவீச்சு
இதுகுறித்து தகவல் அறிந்த நாகுடி போலீசார் மற்றும் அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து புகாரின் பேரில் நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்ைட உடைத்து 10 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.






