18 பவுன் நகை திருட்டு


18 பவுன் நகை திருட்டு
x

மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் 18 பவுன் நகைகளை திருடிய ஆந்திராவை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் 18 பவுன் நகைகளை திருடிய ஆந்திராவை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார்.

நகை திருட்டு

மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை கிராமத்தை சேர்ந்த சுடர்மணி. இவருடைய மனைவி சத்யா (வயது31). சம்பவத்தன்று இவர் மயிலாடுதுறை காமராஜர் பஸ் நிலையத்தில் தனியார் பஸ்சில் ஏறினாா். அப்போது அவர் கைப்பையில் வைத்திருந்த நகைகள் திருட்டு போனது. இதுகுறித்து சத்யா போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் மயிலாடுதுறை போலீசார் பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் பஸ் வந்து நின்றபோது, அனைவரும் பஸ்சில் ஏற முயற்சிக்கும்போது, ஒரு பெண் மட்டும் தன் குழந்தையுடன் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் பஸ்சில் இருந்து இறங்குவது தெரியவந்தது.

ஆந்திர மாநில பெண்

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அதற்கு முந்தைய கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்தனர். அப்போது சம்பந்தப்பட்ட பெண் 30-க்கும் மேற்பட்ட பஸ்களில் ஏறி இறங்குவது தெரியவந்தது. பஸ்சில் பிச்சை எடுப்பவர் போன்ற தோற்றத்தில் இருந்த அந்த பெண் குறித்த விவரங்களை சேகரித்த போது, அந்த பெண் உள்ளிட்ட சிலர் ஆந்திர மாநிலத்தில் இருந்து ஒரு குழுவாக வந்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே முட்லூர் பகுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சிதம்பரத்துக்கு சென்ற போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அந்த பெண் கேமராவில் பதிவாகி இருந்த அதே சேலை, ஜாக்கெட்டுடன் சாலையோரம் அமர்ந்திருந்ததை போலீசார் பார்த்தனர். இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சிறுதானூர், முள்ளுக்குடி கிராமத்தை சேர்ந்த ராஜு மனைவி துர்கா (வயது25) என்பதும், ஆந்திராவில் இருந்து ஒரு குழுவாக வந்து தங்கி திருட்டு, வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. மேலும் சத்யாவின் கைப்பையில் வைத்திருந்த நகைகளை திருடியது துர்காதான் என்பதும் தெரியவந்தது.

ஆந்திராவுக்கு அனுப்பிவைப்பு

திருடிய நகைகளை துர்கா தனது சகோதரியிடம் கொடுத்து ஆந்திராவில் உள்ள தனது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் துர்காவை கைது செய்து மயிலாடுதுறைக்கு கொண்டு வந்தனர்.

துர்கா சகோதரியின் செல்போன் நம்பரை பெற்ற போலீசார் 8 பேர் வேனில் செல்போன் சிக்னலை பின்தொடர்ந்து ஆந்திராவில் உள்ள துர்காவின் சொந்த ஊருக்கு சென்றனர்.

அங்கு போலீசாரின் நடமாட்டத்தை உணர்ந்து தப்பி ஓட முயன்ற துர்காவின் சகோதரியை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

நகைகள் மீட்பு

விசாரணையில் வீட்டுக்கு சிறிது தூரத்தில் மண்ணில் பள்ளம் தோண்டி பதுக்கி வைத்திருந்த 18 பவுன் நகைகளை துர்காவின் சகோதரி நேற்று காலை போலீசாரிடம் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து நகைகளுடன் போலீசார் மயிலாடுதுறைக்கு வந்தனர். கைது செய்யப்பட்ட துர்க்கா மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story