வீட்டின் கதவை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை; உறவினர் கைது
வீட்டின் கதவை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை; உறவினர் கைது
கணபதி
கணபதியில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 25 பவுன் நகை கொள்ளையடித்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.
வெளியூர் சென்றனர்
கோவை கணபதி சங்கனூர் ரோடு தெய்வநாயகி நகர் 3-வது வீதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது56). இவர் தனது மனைவி, மகன்கள் பிரேம் மற்றும் ஸ்டீபன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் சங்கனூர் ரோட்டில் பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார்.
இவரது மகன்கள் வெள்ளக்கிணறு பகுதியில் டைல்ஸ் மொத்த வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை காலை ஆரோக்கியசாமி, வீட்டை பூட்டி விட்டு தனது மனைவி, மகன் ஸ்டீபன் மற்றும் இரு மருமகள்களுடன் குடும்பத்தோடு சிவகங்கையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
25 பவுன் நகை கொள்ளை
பின்னர் மறுநாள் ஊருக்கு திரும்பி வந்தனர். அப்போது ஆரோக்கியசாமி தனது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் அறையில் உள்ள பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் கோவை கிழக்கு சரக உதவி கமிஷனர் பார்த்திபன் மேற்பார்வையில் சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.
வாக்குமூலம்
இந்த வழக்கில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வாகன எண்களை வைத்து விசாரணையை முடுக்கினர். அப்போது ஆரோக்கிய சாமியின் உறவினரான சித்தாபுதூரை சேர்ந்த சவரிமுத்து என்பவரின் மகன் மரிய அமுதம் (37) என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டன.
இதுகுறித்து உதவி கமிஷனர் பார்த்திபன் கூறுகையில், சொந்தமாக தொழில் செய்து வந்த மரியம் அமுதம் பங்கு சந்தையில் பணத்தை இழந்துள்ளார். ஆகவே அதனை ஈடு செய்யும் வகையில் இந்த கொள்ளையை அரங்கேற்றியதாக வாக்கு மூலத்தில் தெரிவித்தார் என்றார்.
மேலும் 2 பேர் கைது
மேலும் மற்றொரு சம்பவத்தில் கணபதி வ.உ.சி நகர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்த முனியாண்டி என்பவர் மகன் கமலக்கண்ணன் (36) மற்றும் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த முகமது என்பவர் மகன் யூசப் (47) ஆகியோரை கைது செய்தனர்.