உசிலம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகை கொள்ளை


உசிலம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகை கொள்ளை
x

உசிலம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மதுரை

உசிலம்பட்டி

45 பவுன் நகைகள் திருட்டு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பி.எம்.டி. நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ரவி. தனியார் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது தோட்டத்து வீட்டில் குடும்பத்தினருடன் தங்கினார். அதன் பின்னர் நேற்று காலை தனது வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 45 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரவி போலீசாருக்கு தகவல் அளித்தார். இதைதொடர்ந்து உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையடித்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மற்றொரு வீட்டில் திருட முயற்சி

இதேபோன்று உசிலம்பட்டி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் வெளியூர் சென்றுவிட்டு நேற்று காலை வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் நகை, பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிய கொள்ளையர்கள் வீட்டு காவலுக்கு இருந்த நாயை தாக்கி விட்டு தப்பி சென்றனர். காயம் அடைந்த நாயை கால்நடை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் உசிலம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story