மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி நூதன திருட்டு
மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலியை நூதன முறையில் மர்ம நபர் திருடிச்சென்றார்.
மணப்பாறை:
6 பவுன் நகை திருட்டு
மணப்பாறையை அடுத்த பெருமாம்பட்டியை சேர்ந்தவர் அம்மாகண்ணு(வயது 65). இவரின் வீட்டிற்கு சென்ற சுமார் 35 வயது மதிக்கதக்க நபர், அவரது கை, கால் வலிக்கு மருந்து கொடுப்பதாக கூறி, உடலில் எதையோ தடவிய நிலையில் மூதாட்டிக்கு சுயநினைவு இன்றி போகவே அவர் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை திருடிக்கொண்டு சென்று விட்டார்.
சிறிது நேரம் கழித்து மூதாட்டி விழித்து பார்த்த நிலையில் தங்கச்சங்கிலி திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக மூதாட்டியின் மகன் நந்தகுமார் அளித்த புகாரின் பேரில் புத்தாநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 பேர் கைது
*திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள சைக்கிள் நிறுத்தும் பகுதியில் 30 வயதுடைய வாலிபர் பிணமாக கிடந்தார். இதுபற்றி அபிஷேகபுரம் கிராம நிர்வாக அதிகாரி ராஜேஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் போலீசார், இறந்து கிடந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*திருச்சி காந்தி மார்க்கெட் ஜெயில்பேட்டையை சேர்ந்த ஜெயா (31), திருச்சி மாநகராட்சி தூய்மைப்பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று துப்புரவு பணி மேற்கொண்டபோது, பையில் வைத்திருந்த அவருடைய செல்போனை பாலக்கரையை சேர்ந்த அறிவழகன் (24) எடுத்துக்கொண்டு, பெரியமிளகுப்பாறையை சேர்ந்த லாரன்சின் (21) ஆட்டோவில் ஏறி தப்பிச்சென்றார். இதுகுறித்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன.
ரெயில் மோதி மூதாட்டி பலி
*அரியமங்கலம் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் லதா (64). இவர் தனது மகளிடம் கேரளாவுக்கு பஸ்சில் செல்வதாக கூறிச்சென்றார். ஆனால் அவர் கேரளாவுக்கும் செல்லவில்லை. இது குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், லதா திண்டுக்கல் மாவட்டம், வெள்ளோடு ரெயில் நிலையம் அருகே ரெயிலில் அடிபட்டு தண்டவாளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
*திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் சீனிவாசன், செயலாளர் ரங்கராஜன் உள்பட 60 பேர் மீது செசன்சு கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நகை திருட்டு
*திருச்சி கருமண்டபம் விசுவாஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் மணி(56). தனியார் நிறுவன ஊழியரான இவர் வேலைக்கு சென்றுவிட்டார். இவருடைய மனைவி வீட்டை பூட்டிவிட்டு கோவிலுக்கு சென்றார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, 3¼ பவுன் சங்கிலி, ரூ.3 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது.