கோவில்களில் அம்மனின் தாலி-உண்டியல் பணம் திருட்டு


கோவில்களில் அம்மனின் தாலி-உண்டியல் பணம் திருட்டு
x

வெவ்வேறு சம்பவத்தில் 2 கோவில்களில் அம்மனின் தாலி-உண்டியல் பணம் திருட்டு போனது.

திருச்சி

சோமரசம்பேட்டை:

கோவிலில் திருட்டு

திருச்சி ராம்ஜிநகர் அருகே உள்ள கள்ளிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட முல்லை நகரில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாரிமுத்து என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை கோவிலை திறந்து பூஜைகள் நடத்தி விட்டு இரவில் கோவிலின் கருவறை கதவை மட்டும் பூட்டிவிட்டு, அருகில் உள்ள டீக்கடைக்கு டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அம்மன் கழுத்தில் இருந்த சுமார் 1½ பவுன் தாலியை திருடிச்சென்றுவிட்டார். பின்னர் கோவிலின் வெளிக்கதவை பூட்டுவதற்காக வந்த பூசாரி மாரிமுத்து, கருவறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து கோவிலில் உள்ள பொருட்களை பார்த்தபோது, அம்மன் கழுத்தில் இருந்த பொட்டுதாலி திருட்டு போனது தெரியவந்தது. இதையறிந்த அப்பகுதி மக்கள், கோவிலின் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு ராம்ஜிநகர் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் வந்து பார்வையிட்டனர். ேமலும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள வடதீர்த்தநாத சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் மரக்கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்துள்ளனர். பின்னர் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து கோவில் செயல் அதிகாரி அகிலா அளித்த புகாரின்பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புகையிலை விற்றவர் கைது

*திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள கடைகளில் மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி பொன்ராஜ் தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர் முகமது சிராஜிதீனை பிடித்து தில்லை நகர் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, 6 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கைது

*முசிறி அடுத்த வடக்கு சொரியம்பட்டியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (44). இவரது சகோதரர் கந்தசாமி (37). இவர்களது தாய் தனக்கு உண்டான 50 சென்ட நிலத்துடன் கந்தசாமியுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், மகேஸ்வரனுக்கு உள்ள இடத்தில் உள்ள மரத்தை கந்தசாமி வெட்டியுள்ளார். அப்போது மகேஸ்வரன் ஏன் எனது இடத்தில் உள்ள மரத்தை வெட்டுகிறாய் என்று கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கந்தசாமி அருகில் கிடந்த கட்டையை எடுத்து மகேஸ்வரனை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்தசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகை திருட்டு

*தா.பேட்டை அருகே கோணப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (67). இவர் வீட்டை பூட்டி விட்டு 100 நாள் வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைடுத்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, வீீட்டில் இருந்த 2¼ பவுன் தங்க நகையை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து தங்க நகையை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story