மின்மாற்றியில் தாமிர கம்பிகள் திருட்டுஉடந்தையாக இருந்த மின்பாதை ஆய்வாளர் பணியிடை நீக்கம்


மின்மாற்றியில் தாமிர கம்பிகள் திருட்டுஉடந்தையாக இருந்த மின்பாதை ஆய்வாளர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 11 Feb 2023 6:45 PM GMT (Updated: 11 Feb 2023 6:46 PM GMT)

மின்மாற்றியில் தாமிர கம்பிகள் திருட்டு சம்பவத்தில் உடந்தையாக இருந்த மின்பாதை ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதைகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மின்மாற்றிகளை மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த தாமிர கம்பிகளை திருடிச்சென்ற சம்பவம் தொடர்கதையாக நிகழ்ந்து வந்தது.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் விசாரித்தனர். அதில், தியாகதுருகம் பகுதியை சேர்ந்த ஷபிஅகமது மகன் சவுகத்அலி(வயது 29) என்பதும், இவர், வட தொரசலூர் கிராமத்தை சேர்ந்த குமார் மகன் விக்னேஷ்(20), அன்பு(19) ஆகியோருடன் சேர்ந்து திருடியதும் தெரியவந்தது. இவர்கள் கொடுத்த தகவலின் பேரில், திருட்டு சம்பவத்துக்கு உடந்தையாக மின்வாரிய ஊழியர் சின்னசேலத்தை சேர்ந்த தாஜுதீன் மகன் இப்ராஹிம்(35) மற்றும் திருடிய தாமிர கம்பிகளை விலைக்கு வாங்கிய வியாபாரிகள் தியாகதுருகத்தை சேர்ந்த ஜான்பாஷா மகன் ஜாபர்(35), கள்ளக்குறிச்சி பிச்சைக்கனி மகன் முனிராஜ்(39), சேஷையா மகன் ஆனந்த்(40) ஆகியோரும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 7 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.

பணியிடை நீக்கம்

இதற்கிடையே, மின்பாதை ஆய்வாளர் இப்ராஹிம் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு கள்ளக்குறிச்சி தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உதவி செயற்பொறியாளருக்கு பரிந்துரை செய்தார்.

இந்த பரிந்துரையின் பேரில் மின்பாதை ஆய்வாளர் இப்ராஹிம்மை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பயிர்மான கழக உதவி செயற்பொறியாளர் உத்தரவிட்டுள்ளார்.

மேறகண்ட தகவல் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story