வீட்டின் கதவை உடைத்து நகை- பணம் திருட்டு


வீட்டின் கதவை உடைத்து நகை- பணம் திருட்டு
x

வள்ளிமலை அருகே பட்டப்பகலில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணத்தை திருடிச்சென்று விட்டனர்.

வேலூர்

வள்ளிமலை அருகே பட்டப்பகலில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணத்தை திருடிச்சென்று விட்டனர்.

கதவு உடைப்பு

வள்ளிமலையை அடுத்த கோட்டநத்தம் பகுதியை சேர்ந்தவர் சரண்யா (வயது 25). இவருக்கு 6 வருடங்களுக்கு முன் சரவணபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த வருடம் ராஜேஷ், மனைவி, மகளை விட்டு பிரிந்து வேறொரு பெண்ணுடன் சென்று விட்டதாக கூறப்படுகின்றது. சரண்யா மாமனார் ஆனந்தன், மாமியார் சந்திரா ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் சரண்யா தையல் பயிற்சி வகுப்புக்கு சென்றுள்ளார். மாமனார் கூலி வேலைக்கும், மாமியார் சந்திரா மாடு மேய்க்கவும் வீட்டை பூட்டிவிட்டு சென்றனர். அருகில் உள்ள நிலத்தில் மாடுகளை கட்டி விட்டு வீட்டுக்கு வந்தபோது மர்ம நபர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்து இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதனைக் கண்ட சந்திரா ஓடி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

நகை- பணம் திருட்டு

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு நகை, பணம் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து மருமகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் சரண்யா வீட்டிற்கு சென்று பார்த்து, மேல்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து மேல்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story