சுற்றுலா பயணிகள் காரில் இருந்து 14 பவுன் நகை, பணம் திருட்டு


சுற்றுலா பயணிகள் காரில் இருந்து 14 பவுன் நகை, பணம் திருட்டு
x

திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்த தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா பயணிகளின் காரில் இருந்து 14 பவுன் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி

குலசேகரம்:

திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்த தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா பயணிகளின் காரில் இருந்து 14 பவுன் நகை, பணத்ைத திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள்

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிளையூரணி ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்த திருமணி மனைவி பிரேமா (வயது 40). இவரும் புதியம்புத்தூர், கூட்டாம்புளி போன்ற இடங்களைச் சேர்ந்த உறவினர்கள் 7 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என 10 பேர் நேற்று காலையில் ஒரு காரில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அவர்கள் பிற்பகலில் திற்பரப்பு அருவிக்கு வந்தனர்.

காரை திற்பரப்பு அருவியின் அருகே வாகனங்கள் நிறுத்தும் இடத்தின் கடைசி எல்லை பகுதியில் நிறுத்தினர். காரின் உள்ளே ஒரு தோள் பையில் 13 பவுன் தங்க சங்கிலி, ஒரு பவுன் எடையுள்ள ஒரு ஜோடி கம்மல், ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசு, ரூ.2000 ரொக்கப்பணம், வீட்டுச் சாவிகள், செல்போன் உள்ளிட்டவைகளை வைத்து விட்டு கார் கதவைப் பூட்டி விட்டு அருவியில் குளிக்க சென்றனர்.

நகை திருட்டு

பின்னர் குளித்து விட்டு காரில் வந்து பார்த்த போது பையில் வைத்திருந்த 14 பவுன் தங்க நகைகள், வெள்ளிக் கொலுசு மற்றும் ரூ.2000 பணத்தை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தனர். அதே வேளையில் செல்போன்கள், வீட்டு சாவி ஆகியவை காருக்குள்ளேயே கிடந்தது.

இவர்கள் குளிக்க செல்வதை நோட்ட மிட்ட யாரோ மர்ம நபர்கள் கள்ளச்சாவி மூலம் கார் கதவை திறந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றதாக தெரிகிறது.

இதுகுறித்து பிரேமா குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தொடர் திருட்டு

திற்பரப்பு அருவி பகுதியில் சமீப காலமாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த வாரம் இங்கு வந்த ஒரு சுற்றுலா குழுவினரிடம் இருந்து 1 பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்டது. சில நாள்களுக்கு முன்பு அருவியின் அருகே நிறுத்தி இருந்த காரில் இருந்து 4 செல்போன்கள் திருட்டு போயின.

தொடர்ந்து நடைபெற்று வரும் திருட்டு சம்பவங்களால் சுற்றுலா பயணிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, அருவி பகுதிகளில் சக்தி வாய்ந்த கண்காணிப்பு கேமராக்கள் வைப்பதுடன், கூடுதல் போலீசாரை பணியில் அமர்த்தி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

----

1 More update

Next Story