வீட்டு பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் நகை-பணம் திருட்டு
சின்னசேலத்தில் வீட்டு பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் நகை மற்றும் பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சின்னசேலம்,
சின்னசேலம் அடுத்த நயினார்பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ் (வயது 32). இவர் தனது குடும்பத்தினருடன் சின்னசேலம் மகாசக்தி நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். தினேஷ் வேலை தேடி கோவைக்கு சென்றார். இந்த நிலையில் தினேசின் மனைவி பிரியா நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குழந்தைகளுடன் அருகில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை பிரியா திரும்பி வந்துபார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த பிரியா உடனே வீட்டுக்குள் சென்றுபார்த்தார். அப்போது அங்கிருந்த பிரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. திருடு போன நகை மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த தகவலின் பேரில் சின்னசேலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த வீட்டில் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.