சமயபுரம் கோவிலில் ஊராட்சி தலைவரின் கணவரிடம் ரூ.20 ஆயிரம் திருட்டு


சமயபுரம் கோவிலில் ஊராட்சி தலைவரின் கணவரிடம் ரூ.20 ஆயிரம் திருட்டு
x

சமயபுரம் கோவிலில் ஊராட்சி தலைவரின் கணவரிடம் ரூ.20 ஆயிரம் திருட்டுபோனது.

திருச்சி

சமயபுரம்:

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்தவர் பச்சமுத்து(வயது 50). விவசாயி. இவரது மனைவி ஜோதி. இவர் விராலிமலை ஊராட்சி ஒன்றியம் லட்சுமணப்பட்டி ஊராட்சி தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் பச்சமுத்து, ஜோதி ஆகியோர் தங்களது மகன், மகளுடன் நேற்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு கீரனூரில் இருந்து காரில் வந்தனர். இதையடுத்து கோவிலில் ரூ.100 கட்டண தரிசன டிக்கெட் எடுத்துக்கொண்டு கோவில் உள்பிரகாரத்தில் அம்மனை தரிசனம் செய்வதற்காக வரிசையில் சென்றனர். அங்கு மூலஸ்தானத்தில் அம்மனை தரிசனம் செய்துவிட்டு, தீபாராதனை தட்டில் பணம் போடுவதற்காக, பச்சமுத்து பணத்தை எடுக்க முயன்றபோது, வேட்டி பிளேடால் கிழிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதைத்தொடர்ந்து அவர் அணிந்திருந்த டவுசரில் பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்த கோவில் பணியாளர் கோபியிடம் இது குறித்து தெரிவித்தார். அவர் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து சமயபுரம் போலீஸ் நிலையத்தில் பச்சமுத்து புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் விசாரணை நடத்தி வருகிறார்.

கோவிலுக்குள் நடந்த இந்த திருட்டு சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story