அடுத்தடுத்து இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு - போலீஸ் விசாரணை


அடுத்தடுத்து இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு - போலீஸ் விசாரணை
x

திருவெண்ணெய்நல்லூர் அருகே அடுத்தடுத்து இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் கடலூர் சாலையில் கிரிமேடு கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் ரமேஷ்(வயது 41), இவர் மோட்டார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவரின் பக்கத்துக் கடையில் ஆலங்குப்பத்தை சேர்ந்த அன்பழகன்(50) என்பவர் உரக்கடை வைத்துள்ளார்.

இவர்கள் இருவரும் நேற்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை டூவீலரில் வந்த இரண்டு வாலிபர்கள் கம்பியால் இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.7ஆயிரத்தை திருடி உள்ளனர்.

மேலும் கடையில் உள்ள சில இரும்பு ஜாமான் மற்றும் பெட்டிகளை திருட முயன்ற போது சத்தம் கேட்டதால் கடையின் அருகே உள்ள வீட்டுக்காரர்கள் வெளியில் வந்து பார்த்தபோது இரண்டு திருடர்களும் டூவீலரில் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ரமேஷ் மற்றும் அன்பழகன் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் செய்தார்.

திருவெண்ணெய்நல்லூர் போலீசார் கடைக்கு நேரிடையாக வந்து விசாரணை நடத்தினர். கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை பார்த்தபோது கம்பியால் கடையின் பூட்டை உடைத்து திருடியவர்களின் முகம் தெளிவாக தெரிந்தது. இதனை வைத்து திருடர்களை கண்டுபிடித்து விடலாம் எனவும், மேலும் இது போன்ற திருட்டு சம்பவங்களில் இவர்கள் எங்கேயாவது ஈடுபட்டு இருக்கிறார்களா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story