தேனி அம்மன் கோவில் குடமுழுக்கு
சீர்காழி அருகே தேனி அம்மன் கோவில் குடமுழுக்கு
சீர்காழி:
சீர்காழி அருகே கொண்டல் ஊராட்சிக்கு உட்பட்ட தேனூர் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான, பழமைவாய்ந்த தேனி அம்மன் கோவில் உள்ளது. விநாயகர், அய்யனார், வீரபத்திரர், வீரன், சப்த மாதர்கள், கன்னியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுடன் கூடிய தேனியம்மன் கோவில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் குடமுழுக்கு விழா நேற்று நடந்தது. முன்னதாக குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை முதல் கால யாகசாலை பூஜை தொடங்கி கணபதி பூஜை, கோ பூஜை, கலச பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவுபெற்று, யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு மேள தாளங்கள் முழங்க கோவிலை வலம் வந்தது. தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில், புனிதநீர் ஊற்றப்பட்டு விமான குடமுழுக்கும், மூலவருக்கு அபிஷேகமும் நடைபெற்றது. விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை தேனூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.