தேனி கிழக்கு சந்தை பகுதியில்அட்டகாசம் செய்யும் குரங்குகள்:கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?


தேனி கிழக்கு சந்தை பகுதியில்அட்டகாசம் செய்யும் குரங்குகள்:கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
x
தினத்தந்தி 19 Sep 2023 6:45 PM GMT (Updated: 19 Sep 2023 6:45 PM GMT)

தேனி கிழக்கு சந்தையில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி

தேனி கிழக்கு சந்தை நகரின் முக்கிய பகுதிகளின் ஒன்றாக திகழ்கிறது. இங்கு ஏராளமான கமிஷன் கடைகள், உணவு தானிய மொத்த விற்பனை கடைகள் அமைந்துள்ளன. ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு செல்லும் பாதையாகவும் இது திகழ்கிறது. அதையொட்டி எடமால் தெரு கடைவீதி உள்ளது.

இந்த பகுதியில் குரங்குகள் நடமாட்டம் நீண்டகாலமாக இருந்து வருகிறது. இருப்பினும் அவற்றின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவுக்கு குறைவாகவே இருந்தது. ஆனால், சமீப காலமாக இங்கு உலா வரும் குரங்குகளின் எண்ணிக்கை பெருகி உள்ளது. மலைப்பகுதிகளில் இருந்து புதிதாக ஏராளமான குரங்குகள் நகருக்குள் புகுந்துள்ளன. 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டம் கூட்டமாக கிழக்கு சந்தை பகுதியில் சுற்றித் திரிகின்றன. அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் கையில் வைத்திருக்கும் தின்பண்டங்களை குரங்குகள் அபகரிக்கின்றன. கடைகளில் உள்ள பொருட்களையும் தூக்கிச் செல்கின்றன.

கூட்டமாக வரும் குரங்குகளை பார்த்து பயத்தில் அங்கும் இங்கும் ஓடும் பள்ளி மாணவ, மாணவிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, இங்கு மாணவ, மாணவிகளை அச்சுறுத்தும் வகையிலும், வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் சுற்றித் திரியும் குரங்குகளை கூண்டுகள் வைத்து பிடித்து, அப்புறப்படுத்த வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.


Related Tags :
Next Story