12 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டிய தேனி போலீஸ் சூப்பிரண்டு


12 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டிய தேனி போலீஸ் சூப்பிரண்டு
x
தினத்தந்தி 25 Jun 2023 7:00 PM GMT (Updated: 26 Jun 2023 12:03 PM GMT)

தேனியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடந்த ஊர்வலத்தில் போலீஸ் சூப்பிரண்டு 12 கி.மீ. தூரம் சைக்கிள் ஓட்டினார். மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்

தேனி

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, தேனி மாவட்ட போலீஸ் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தேனியில் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நேற்று நடந்தது. தேனி பங்களாமேட்டில் இருந்து இந்த ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் போலீசார், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

பங்களாமேட்டில் தொடங்கிய ஊர்வலம் பழைய பஸ் நிலையம், நேரு சிலை சிக்னல், பழனிசெட்டிபட்டி, வழியாக போடி விலக்கு வரை சென்று பின்னர் மீண்டும் பழனிசெட்டிபட்டி, நேரு சிலை சிக்னல், பெரியகுளம் சாலை, அல்லிநகரம் வழியாக அன்னஞ்சி விலக்கில் நிறைவடைந்தது. சுமார் 12 கிலோமீட்டர் தூரம் நடந்த இந்த விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே சைக்கிள் ஓட்டியபடி மாணவ, மாணவிகளுடன் பங்கேற்றார்.

ஊர்வலத்தில் பங்கேற்ற சைக்கிள்களில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. ஊர்வலம் நிறைவடைந்ததை தொடர்ந்து சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விவேகானந்தன், சுகுமார், தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story