தேனி வீரப்ப அய்யனார் கோவில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம்
நந்தீஸ்வரர் சிலை வைத்த விவகாரத்தில் தேனி வீரப்ப அய்யனார் கோவில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தேனி அல்லிநகரம் மலையடிவாரத்தில் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வீரப்ப அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சில நாட்களுக்கு முன்பு கிராம கமிட்டி சார்பில் நந்தீஸ்வரர் சிலை வைக்கப்பட்டது. அனுமதியின்றி வைக்கப்பட்ட அந்த சிலையை அகற்ற அறநிலையத்துறை அதிகாரிகள் முயற்சி செய்தனர்.
அதற்கு கிராம கமிட்டியினர், பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. முறையான அனுமதி பெற்ற பிறகு நந்தீஸ்வரர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்வது என்றும், அதுவரை நந்தீஸ்வரர் சிலையை வழிபடக் கூடாது என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இதற்கிடையே, கோவிலில் அனுமதியின்றி நந்தீஸ்வரர் சிலை வைத்ததை தடுக்க தவறியது மற்றும் பல மாதங்களுக்கு முன்பே சிலை வைப்பதற்கான பீடம் கட்டப்பட்ட நிலையில் அதை கண்காணித்து தடுக்காமல் இருந்தது தொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை திண்டுக்கல் இணை ஆணையர் பாரதி விசாரணை நடத்தினார். விசாரணையை தொடர்ந்து கோவில் செயல் அலுவலர் ராமதிலகத்தை பணி இடைநீக்கம் செய்து இணை ஆணையர் பாரதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.