தேனியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்
ேதனியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தாா்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடந்த விழாவில் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து தேனி மாவட்டத்தில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க தொடக்க விழா தேனி பங்களாமேட்டில் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி இந்த பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் முன்னிலை வகித்தார். தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் தொடக்க நிகழ்வாக கலெக்டர் தலைமையில் தூய்மைக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் பொதுமக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்ற தூய்மை விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் பங்களாமேட்டில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், தேனி அல்லிநகரம் நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியா, துணைத்தலைவர் செல்வம், நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார் மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.