எழுத, படிக்க தெரியாதோர் 1555 பேர்


எழுத, படிக்க தெரியாதோர் 1555 பேர்
x
தினத்தந்தி 17 Dec 2022 12:15 AM IST (Updated: 17 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் எழுத, படிக்க தெரியாதவர் கள் 1555 பேர் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்து உள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் எழுத, படிக்க தெரியாதவர் கள் 1555 பேர் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்து உள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தன்னார்வலர்களுக்கு பயிற்சி

தமிழகத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக உயர்த்த அனைவரும் கல்வி பெற பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி தெற்கு வட்டார வளமையத்தில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. இதை மேற்பார்வையாளர் காயத்திரி தொடங்கி வைத்தார்.

ஆசிரிய பயிற்றுனர்கள் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதில், 95 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி சார்ந்த குடியிருப்பு பகுதிகளில் உள்ள 15 வயதிற்கு மேற்பட்ட எழுத, படிக்க தெரியாதவர்கள் எழுத்தறிவு பெறும் நோக்கில் கணக் கெடுப்பது குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இது குறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-

1555 பேர் கணக்கெடுப்பு

தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ் பள்ளி சாரா வயது வந்தோர் இயக்கம் சார்பில் 15 வயதுக்கு மேற்பட்ட கல்வி அறிவு இல்லாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எழுத, படிக்க கற்று கொடுக்க புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதில், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ள 95 குடியிருப்பு பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் 15 வயதிற்கு மேற்பட்ட 1555 பேர் எழுத, படிக்க தெரியாமல் உள்ளது தெரியவந்தது. இவர்களுக்கு அடிப்படையான எண்ணும், எழுத்தறிவு குறித்த பயிற்சி அளிக்கப்படும். இதற்காக வட்டார வளமையத்தில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கையெழுத்து

பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று எழுத, படிக்க தெரியாத நபர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்.

தபால் நிலையம், வங்கிக்கு சென்று எப்படி பணம் எடுப்பது?, பணம் செலுத்துவது, கையெழுத்திடுவது எப்படி? என்பது போன்ற பயிற்சி அளிக்கப்படும். மேலும் பஸ்சில் எழுதப் பட்டு உள்ள ஊர் பெயர்களை படிக்கவும் கற்றுக்கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story